சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் வெள்ளை காண்டாமிருகம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் இளையர் ஒருவர் சாகச செயலில் ஈடுபட்டார். அவருக்குக் குறைந்தது ஓர் ஆண்டு சீர்திருத்தப் பயிற்சி தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
19 வயது ரால்ஃப் வீ யி காய், சீர்திருத்த நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்படுவார். அங்கு அவருக்குக் கடுமையான பயிற்சிகளும் ஆலோசனையும் வழங்கப்படும். வீட்டிலிருந்து கல்வி கற்கும் வீ, காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறும்புச் செயல்கள், அத்து
மீறல்கள், போதைப் பொருள் உட்கொண்டது ஆகியவை தொடர்பாக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை அவர் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரரான வீ, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதியன்று தமது பிரச்சினை
களைப் பற்றி தமது நண்பருடன் பேச அவரது வீட்டிற்குச் சென்றதை அடுத்து, குற்றச் செயல்களில் ஈடுபட்டார். வீ எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
நண்பரின் வீட்டைவிட்டு வீ புறப்பட்டபோது, அவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னிரவு 2.40 மணி அளவில் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று அங்கிருந்த தகவல் பலகையை உதைத்து சேதப்படுத்தினார். இதனால் $900 இழப்பு ஏற்படுத்தினார். இதைப் பார்த்த டாக்சி ஓட்டுநர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து தமது நண்பரின் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சடிஸ் பென்ஸ் காரின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளை உதைத்து சேதப்படுத்தி $2,800 இழப்பு ஏற்படுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதியன்று சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்குச் சென்ற வீ, காண்டாமிருகம் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்து சாகச செயலில் ஈடுபட்டார். அதை பெண் ஒருவர் காணொளி எடுத்தார்.
இ்துதொடர்பாக அதே நாளில் மாலை 5.40 மணி அளவில் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வீயையும் அவருடன் இருந்து அவரது சாகச செயலைக் காணொளி எடுத்த பெண்ணையும் அடையாளம் கண்டனர்.
அத்துமீறலுக்கு உடந்தையாக இருந்ததற்கு அப்பெண்ணுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதியன்று செந்தோசா கோவ்வில் உள்ள தமது நண்பரின் வீட்டில் தவளை ஒன்றை வீ துன்புறுத்திக் கொன்றதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். அந்தக் கொடூரமான சம்பவம் காணொளி எடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் முதன்முறையாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகின. அவர் $15,000க்குப் பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அடுத்த மாதமே அவர் கஞ்சா பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியன்று மனநலக் கழகத்தில் வீ இருந்தபோது, நீதிமன்றத்துக்குச் செல்லாத காரணத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி காணொளி மூலம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் $20,000க்குப் பிணையில் விடப்பட்டார்.
ஆனால், சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள அவர் நான்கு முறை தவறினார். தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, தமது நடமாட்டத்தைக் கண்காணிக்கப் பொருத்தப்பட்ட மின்கருவியை அவர் வெட்டி எறிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தமது நண்பரின் வீட்டுக்கு மிதிவண்டி மூலம் சென்றார்.
தமது மகனின் இருப்பிடம் தெரியாமல் காவல்துறையினரிடம் வீயின் தந்தை தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த மாதம் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்துக்காக வீ
மீண்டும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.

