சாங்கி விமானநிலையம், திடீர் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் அதன் வடிகால் கட்டமைப்பில் சூரியசக்தி உணர்வுச் சாதனங்களை அமைத்து உள்ளது.
கனமழை, பருவநிலை மாற்றம், கடல் அலையேற்றம் போன்றவை காரணமாக ஏற்படக்கூடிய திடீர் வெள்ளத்தைச் சமாளிக்க அந்தச் சாதனங்கள் மேலும் உறுதுணையாக இருக்கும் என்று சாங்கி விமான நிலையக் குழுமப் பெருந்திட்டப் பிரிவின் மூத்த நிர்வாகி திருவாட்டி செங் லிப்பிங் தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடுப்பகுதி முதல் அத்தகைய ஏழு உணர்வுச் சாதனங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அவை ரேடாரைப் பயன்படுத்தி வடிகால்களில் தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்காணிக்கும்.
ஒவ்வொரு சாதனத்திலும் பிரத்தியேகப் படச்சாதனமும் பொருத்தப்பட்டு இருக்கும்.
அதன்மூலம் வடிகால் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்காணிக்கலாம்.
வடிகால்களில் நீரின் அளவு 60 விழுக்காட்டைத் தாண்டினால் அந்தக் குழுமத்தின் பொறியியல், உருவாக்கக் குழுவுக்கு அதுபற்றி தகவல் கிடைக்கும்.
வடிகால் அடைப்புகளில் சிக்கி இருக்கக்கூடிய கழிவுப்பொருட்களை, இலை தழைகளை உடனடியாக அகற்றி தண்ணீர் கடலுக்கு விரைந்து ஓடுவதை அந்தக் குழு உறுதிப்படுத்தும்.
மேலும் இத்தகைய நான்கு சாதனங்கள் அடுத்த ஆண்டு பொருத்தப்படும். அவை வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ள இடங்களை உள்ளடக்கி அமைக்கப்படும் என்று திருவாட்டி சியோங் மேலும் தெரி வித்தார்.

