சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்ககும் இடையிலான தரைவழி எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதல் ஜோகூர் கடற்பாலம் வழியாக 35,000க்கும் அதிக தடவை மக்கள் சென்று வந்து உள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தனிமை உத்தர வில்லாத பயணத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) மக்கள் மேலும் பாதுகாப்பாக சென்றுவர புதிய திட்டங்கள் அங்கு இடம்பெறவிருக்கின்றன.
உட்லண்டஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நிர்வகிக்கும் குடிநுழைவு முகப்புகள் அடுத்த மாதம் முதல் மாற்றி அமைக்கப்படும்.
பயணிகள் தங்கள் கடப்பிதழைத் தாங்களே சாதனத்தில் காட்டி அனுமதி பெற்றுச் செல்லலாம்.
இதனால் விடிஎல் ஏற்பாட்டின்கீழ் தரைவழியாக சிங்கப்பூருக்கு வருவோருக்கும் குடிநுழைவு அதிகாரிகளுக்கும் இடையில் நெருக்கம் இருக்காது.
இப்போது பயணிகள் தங்களுடைய கடப்பிதழை குடிநுழைவு முகப்பு அதிகாரிகளிடம் கொடுத்து அனுமதி பெறுகிறார்கள்.
பயணிகளுக்குப் பாதுகாப்புமிக்க, தங்குதடையில்லாத குடிநுழைவு நடைமுறைகள் நடப்பில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பல செயல்திட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடாக முகப்புகளில் கண்ணாடித் தடுப்புகளும் அமைக்கப்படும்.
அந்த முகப்புகளில் செயல்படும் அதிகாரிகள், பயணியின் தடுப்பூசி சான்றிதழ், பரிசோதனை முடிவுகள் முதலான ஆவணங்களைப் பாதுகாப்பான முறையில் பரிசோதிப்பார்கள். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், அடுத்த மாதம் முதல் மின்னணு வருகை அனுமதியை வழங்க இருக்கிறது.
தரைவழியாக சிங்கப்பூருக்கு வருவோர் அதைப் பயன்படுத்த முடியும்.
அதில் ஒருவர் எவ்வளவு காலம் சிங்கப்பூரில் தங்க முடியும் என்பது போன்ற விவரங்கள் இருக்கும். இத்தகைய ஏற்பாடு சாங்கி விமான நிலையத்தில் ஏற்கெனவே நடப்பில் உள்ளது.
கடப்பிதழ்களில் முத்திரை குத்தப்படும் நடைமுறைக்குப் பதிலாக இந்தப் புதிய ஏற்பாடு இடம்பெறும்.
இந்த மின்னணு அனுமதியை மின்னஞ்சல் வழியாகப் பெறலாம். பயணிகள் 'எஸ்ஜி வருகை அட்டையை' இணையம் மூலம் தாக்கல் செய்யும்போது அந்த அனுமதி அவர்களுக்குக் கிடைக்கும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்குச் செல்லவும் அதேபோல மலேசியர்கள் கடற்பாலம் வழி சிங்கப்பூர் வரவும் ஏதுவாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் தரைவழி விடிஎல் விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தப் புதிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் தரைவழியாகப் பேருந்துச் சேவை நடத்தும் நிறுவனங்கள் சேவைகளை அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.
இதையடுத்து அன்றாடம் இரு நாடுகளுக்கும் இடையில் 4,320 பேர் சென்று வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடிஎல் பயண ஏற்பாடு நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. அது முதல் டிசம்பர் 20ஆம் தேதி பிற்பகல் 3 மணி நிலவரப்படி 24,540க்கும் மேற்பட்டவர்கள் மலேசியா சென்று இருக்கிறார்கள்.
அதே காலகட்டத்தின்போது விடிஎல் தரைவழி ஏற்பாட்டின் மூலம் 12,455 பேர் சிங்கப்பூர் வந்து இருக்கிறார்கள்.

