சிங்கப்பூரில் 12க்குக் குறைந்த வயதுள்ள சிறார்களுக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி டிசம்பர் 27ஆம் தேதி முதல் போடப்படும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றுள்ள கல்வி அமைச்சு தொடக்கப்பள்ளிகள், மதரசாக்களில் பயிலும் தொடக்கப்பள்ளி 4 முதல் 6ஆம் வகுப்பு வரைப்பட்ட பிள்ளைகளுக்கு இன்று முதல் குறுஞ்செய்தி அழைப்பு அனுப்பப்படும்.
அதில் இருக்கும் இணைப்பின் மூலம் அவர்கள் முன்பதிவு செய்யலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி இந்தக் குறுஞ்செய்தி தொடக்கப்பள்ளி 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு அனுப்பப்படும்.
அந்தச் செய்தி கிடைக்காத பெற்றோர் அல்லது அதில் கண்டுள்ள இணைப்பைப் பயன்படுத்த இயலாத பெற்றோர் தேசிய தேதிநேர முன்பதிவு முறை மூலம் (child.vaccine.gov.sg) பதியலாம். இந்த முறை டிசம்பர் 27 முதல் செயல்படும்.
child.vaccine.gov.sg முகவரி மூலம் பதிந்து இருப்போர் இந்த முகவரியில் கிடைக்கும் இணக்கப் படிவம் ஒன்றில் கையெழுத்திட்டு அந்த ஆவணத்தைத் தடுப்பூசி நிலையத்திற்கு எடுத்துவர வேண்டும். பெற்றோர் அல்லாத மற்றவர்கள், பெற்றோர் அங்கீகரித்துள்ள படிவத்தைக் கொண்டுவரவேண்டும். இந்தப் படிவத்தை முன்பதிவின்போது பெறலாம்.
சிறாருக்கான தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமான முறையில் முடிந்த பிறகும் பாலர்பள்ளிகளில், பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு நிபந்தனைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். எந்த தடுப்பூசியும் 100% பாதுகாப்பைத் தராது என்பதே இதற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

