நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகமும் நேற்று புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன. உள்கட்டமைப்பு வசதி மற்றும் சுரங்கப்பாதைப் பொறியியல் நிலையம் ஒன்றைத் தோற்றுவிக்க அந்தக் குறிப்பு வகை செய்கிறது.
சிங்கப்பூரில் சுரங்கப்பாதைகளை அமைப்பதற்குத் தேவைப்படும் தேர்ச்சிகளை மேம்படுத்துவதில் அந்த நிலையம் ஒருமித்த கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய தேர்ச்சிகள் இந்தத் தொழில்துறையில் இன்னமும் போதிய அளவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இன்றைய தேதியில் மிக ஆழத்தில் அமைந்திருக்கும் எம்ஆர்டி நிலையம், பென்கூலன் ஸ்திரீட் எம்ஆர்டி நிலையம்தான். டெளன்டவுன் வழித்தடத்தில் 43 மீட்டர் ஆழத்தில் அந்த நிலையம் அமைந்துள்ளது.
ரயில் நடைமேடையை அடை வதற்குப் பயணிகள் தரைத்தளத்தில் இருந்து ஐந்து மின் படிக்கட்டுகள் மூலம் கீழே இறங்கி செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பென்கூலன் நிலையத்தையும் ஃபோர்ட் கேனிங் எம்ஆர்டி நிலையத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை இப்போது உள்ள வடகிழக்கு வழித்தட சுரங்கப்பாதைக்கு ஒரு மீட்டர் மேலே செல்கிறது. இத்தகைய ஒரு பாதையைக் கட்டுவது என்பது மிகவும் சிக்கலான, சவாலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற பொறியியல் சவால்கள், எம்ஆர்டி நிறுவன பொறியாளர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் பொதுவான ஒன்றாகி வருகிறது.
மேலும் மேலும் எம்ஆர்டி நிலையங்களுக்குத் திட்டமிடும் சூழலில் தரை மேல் கட்டப்பட்டு உள்ள கட்டடங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
சிங்கப்பூர் தனது எம்ஆர்டி வழித்தடத்தின் நீளத்தை 2030வது ஆண்டு வாக்கில் 360 கி.மீ. ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இவற்றைக் கருத்தில்கொண்டு சிறப்பு தேர்ச்சிகளைக் கொண்ட மேலும் அதிக பொறியாளர்களை உருவாக்க புதிய பொறியியல் நிலையம் பயிற்சிப் படிப்புகள் மூலம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

