கொவிட்-19க்கு எதிரான காப்பூசி (பூஸ்டர்) போட்டுக்கொண்டாரிடையே வேண்டாத விளைவுகள் அதிகரிக்கவில்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஃபைசர் பயோஎன்டெக்/ கொமிர்னாட்டி காப்பூசி தொடர்பில் பாதக விளைவுகள் ஏற்பட்டதாக 304 பேரும் மொடர்னா/ ஸ்பைக்வேக்ஸ் காப்பூசி தொடர்பில் 87 புகார்களும் வந்துள்ளதாக ஆணையம் கூறியது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 1,451,798 காப்பூசி போடப்பட்டுள்ளது.
இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் வேண்டாத விளைவுகள் அளவு 0.03% ஆக இருக்கிறது. தடிப்பு, முக வீக்கம், மார்பில் சங்கடம், படபடப்பு, காய்ச்சல் ஆகி யவை பொதுவான பக்க விளைவுகளாக இருக்கின்றன. காப்பூசி தொடர்பிலான கடும் பாதிப்புகள் ஏற்பட்டதாக 24 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் விகிதாச்சாரம் 0.002% ஆக இருக்கிறது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதால் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ள புகார்கள் எண்ணிக்கை பற்றியும் ஆணையம் குறிப்பிட்டது. ஃபைசர் தடுப்பூசி தொடர்பில் இத்தகைய 11,601 புகார்கள் வந்தன. இது போடப்பட்ட மொத்த தடுப்பூசி எண்ணிக்கையுடன் ஒப்பிட, 0.14% ஆக உள்ளது. மொடர்னா தடுப்பூசி தொடர்பில் 2,591 புகார்கள் வந்தன. இதன் விகிதாச்சாரம் 0.12% ஆக உள்ளது.

