வெளிநாட்டு ஊழியர்களுக்கான
செலவு அதிகரித்தது
கட்டுமான நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு ஊழியர்களைத் தருவிப்பதற்கான செலவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான விடிஎல் பயணப் பாதைவழி சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட்டனர். அப்போதிருந்ததில் தற்போது வெளிநாட்டு ஊழியர்களைத் தருவிப்பதற்கான செலவு சில வேளைகளில் ஐந்து மடங்குவரை ஆனதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஊழியர்களுக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட செலவுகளை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டியிருந்தது. தடுப்பூசி பயணப் பாதை திறந்துவிடப்பட்ட பிறகு செலவு குறைந்தது. ஆனால் அத்திட்டத்தின்கீழ் கட்டுமானத் துறையில் புதிய எஸ் பாஸ், வேலை அனுமதிச் சீட்டுக்கான விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் செலவு மீண்டும் அதிகரித்தது.
மானபங்க சம்பவம்: ஆடவர் கைது
மானபங்கப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 27 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று முன்தினம் காலை சுமார் பத்தரை மணிக்கு ஜாலான் ரூமா திங்கியில் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டதாகக் காவல்துறையினருக்குப் புகார் வந்தது.
அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையாலும் காவல்துறை காண்காணிப்பு கேமராக்களில் பதிவான படங்களைக் கொண்டும் சந்தேக நபரின் அடையாளம் நேற்று தெரியவந்தது. அந்த ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.
அளவுக்கு அதிகமாக உப்பு
சேர்த்துக்கொள்ளும் சிங்கப்பூரர்கள்
உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவைவிட கிட்டத்தட்ட இரட்டிப்பு அளவு உப்பை (சோடியம்) சிங்கப்பூரர்கள் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அதிகமானோருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதாரக் கணக்கெடுப்பு கூறியுள்ளது.
ஒரு நாளைக்கு ஒருவர் அதிகபட்சம் 2,000 மில்லிகிராம் அளவு உப்பை உட்கொள்ளவேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. ஆனால் சிங்கப்பூரில் உள்ளவர்கள், 2018ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 3,600 மில்லிகிராம் அளவிலான உப்பை உட்கொண்டனர். பத்தில் ஒன்பது பேர், தினசரி உச்சவரம்பிற்கும் அதிகமான உப்பை உட்கொண்டனர்.

