சிலாராங் பார்க் காம்பிளக்ஸ் சிறை நிலையத்தில் உள்ள இன்ஸ்டிடியூஷன் எஸ்2 பிரிவில் இனி கூடுதலான குற்றவாளிகள் தங்கவைக்கப்படுவர். தங்களின் சிறைத் தண்டனைக் காலத்தின் கடைசி பகுதியில் பாடங்களையும் பயிற்சிகளையும் மேற்கொள்ளும் குற்றவாளிகளுக்காக இப்பிரவு ஒதுக்கப்படுகிறது.
'எம்ப்பிளாய்மண்ட் பிரிப்பரேஷன் ஸ்கீம்' எனப்படும் குற்றவாளிகளை வேலை செய்யத் தயார்படுத்தும் திட்டத்தின்கீழ் இங்கிருக்கும் குற்றவாளிகள் வேலை, திறன் பயிற்சிகளில் ஈடுபடுவர். சென்ற மாதம் சிறை (திருத்த) சட்டம் 2021ல் செய்யப்பட்ட மாற்றங்களில் இத்திட்டம் முக்கியமான ஒன்று. கைதிகளின் மறுவாழ்வு நடவடிக்கைகள், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம்.
'எம்ப்பிளாய்மண்ட் பிரிப்பரேஷன் ஸ்கீம்' திட்டம், தற்போது நடப்பில் இருக்கும் வேலை விடுப்புத் திட்டத்திற்குப் பதிலாக செயல்படுத்தப்படும். கைதிகளுக்கான ஒருங்கிணைந்த நிலையமான செலாராங் பார்க் காம்பிளக்ஸில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையம், எஸ்2 பிரிவு உள்ளிட்டவை இருக்கின்றன.

