தைவானில் முதலீட்டு மோசடி ஒன்றை நடத்தியதாக ஒரு சிங்கப்பூரரும் மலேசியாவைச் சேர்ந்த அவரது காதலியும் சந்தேகிக்கப்படுகின்றனர். மோசடியின் மூலம் 37.2 தைவான் டாலருக்கும் (1.83 மில்லியன் வெள்ளி) அதிகமான லாபத்தை இவ்விருவரும் ஈட்டியதாகச் சொல்லப்படுகிறது.
சந்தேக நபரான 45 வயது சிங்கப்பூரர் விக்டர் சோ குவாங் லியாங், ஜிடிஐசி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர். தைவானின் வங்கிகள், முதலீடுகள் தொடர்பிலான சட்டங்களின்படி நேற்று முன்தினம் தைப்பே நகரில் இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தங்கம் உட்பட அதிக மதிப்புள்ள உலோகங்களில் முதலீடு செய்வதற்கான சட்டவிரோதமான திட்டங்களை சோ செயல்படுத்தியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அவற்றின் மூலம் நல்ல லாபம் ஈட்டமுடியும் என்று வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சோவின் காதலியான செயிங்னியல் லோ என்றழைக்கப்படும் லோ லீ-சீ உட்பட மேலும் எட்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்களும் இத்தகைய குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. லோ, ஜிடிஐசி நிறுவனத்தின் பொது நிர்வாகி என்று அதன் இணையத்தளம் குறிப்பிட்டது. நீண்டகாலம் தைவானில் வசித்ததால் சோவுக்கும் லோவுக்கும் அந்நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் இடம்பெறாத ஜிடிஐசியின் இரண்டு நிறுவனங்களின் பங்குகளை விற்று சுமார் 70 மில்லியன் தைவான் டாலரை இருவரும் லாபமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் சீனம் பேசுவோரை இருவரும் குறிவைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

