மேம்பட்ட சுகாதாரக் கவசங்கள் தரப்படும்
உலகம் முழுவதும் ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுடன் தொடர்புடைய விமானநிலைய ஊழியர்கள் அனைவருக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
டாக்சி நிறுத்தம் போன்ற பொது இடங்களில் பணியாற்றுவோர் உட்பட எல்லா விமான
நிலைய ஊழியர்களுக்கும் என்95 முகக்கவசம், முகக்காப்பு போன்ற மேம்படுத்தப்பட்ட தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கப்
படுவதாக ஆணையம் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், விமான நிலையத்தின் முன்களப் பணியாளர்கள் அனை
வரும் பரிசோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். தற்போது நடப்பில் உள்ள ஏழு நாள் ஏஆர்டி பரிசோதனைக்குப் பதில் ஏழு நாள் பிசிஆர் பரிசோதனை என மேம்படுத்தப்படும் என்றது ஆணையம்.
விமானங்களில் பணியாற்றும் ஊழியர்களும் மேம்படுத்தப்பட்ட ஏழுநாள் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மேலும் மூன்று நாள்களுக்கு ஒருமுறை நிறுவனத்தின் கண்காணிப்பிலான ஏஆர்டி பரிசோதனையை அவர்கள் செய்துகொள்ள வேண்டும் என்பதும் ஆணையத்தின் புதிய நடவடிக்கை.
விடிஎல் எனப்படும் தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதைகள் திட்டத்திற்கான பயணச்சீட்டுகள் அனைத்தும் இன்று (டிசம்பர் 23) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை நிறுத்திவைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தனது ஊழியர்களுக்கான பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை வெளியிட்டது.
ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுள் இவையும் அடங்கும்.

