கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறை விதிகளை மீறியதற்காக ஒன்பது உணவு, பானக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சற்றுப்புற அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏழு கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டதோடு இரு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை கால வாரயிறுதியில் அதிகரிக்கப்பட்ட சோதனை நட
வடிக்கைகளில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பைக் குறைக்கத் தவறியதற்காகவும் கடைகளுக்கு வருவோரின் தடுப்பூசி நிலையைச் சோதிப்பதற்கான ஏற்பாடு செய்யாததற்காகவும் ஏழு கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
உதாரணத்திற்கு ஜூ சியாட் ரோட்டில் உள்ள 'பியுபி98' உணவு, பானக் கடை தனது வளாகத்திற்குள் அமர்ந்திருந்த வெவ்வேறு குழு வாடிக்கையாளர்களை ஒன்று கலக்க அனுமதித்ததை அதிகாரிகள் கண்டனர்.
மேலும், அமலாக்க அதிகாரிகள் உள்ளே நுழைய அந்தக் கடை தாமதமாக அனுமதி வழங்கியது.
விதிமீறலுக்காக அந்தக் கடை டிசம்பர் 18 முதல் டிசம்பர் 27 வரை பத்து நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
நடவடிக்கைக்கு உள்ளான ஏழு கடைகளுள் இரண்டு ஏற்கெனவே விதிமீறலில் ஈடுபட்டவை என்பது தெரியவந்தது.
அவற்றில் ஒன்று கிளார்க் கீ அருகில் உள்ள HARU மதுபானக்கூடம். பகடை விளையாட தனது வாடிக்கையாளர்களை அனுமதித்ததன் மூலம் கொவிட்-19 விதிமீறலில் இது ஈடுபட்டது.
ஏற்கெனவே மே மாதமும் இதே விதிமீறலில் ஈடுபட்டதற்காக இந்தக் கூடம் தண்டிக்கப்பட்டது.
அப்போது பத்து நாள்களுக்கு மூட உத்தரவிட்டப்பட்ட நிலையில் மீண்டும் விதிமீறி இருப்பதால் இம்முறை டிசம்பர் 22 முதல் ஜனவரி 30 வரை 40 நாள்கள் மூட இந்த மதுபானக்கூடத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு உணவு, பானக் கடைகள் வாடிக்கையாளர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை ஏற்படுத்தவில்லை.
மேலும் சேஃப் என்ட்ரி வருகைப் பதிவுமுறையை அவை வாடிக்கையாளர்களிடம் சோதிக்கவில்லை.
இந்த விதிமீறல்களுக்காக இந்தக் கடை ஒவ்வொன்றுக்கும் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தில் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அமைச்சு வலியுறுத்தி உள்ளது.

