நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஜோகூரின் இஸ்கந்தார் பகுதி பொருளியல் ஒத்துழைப்பு தொடர்பில் மறுஆய்வு செய்திட சிங்கப்பூரும் மலேசியாவும் நேற்று சந்தித்துப் பேசின.
'இஸ்கந்தார் மலேசியாவுக்கான மலேசிய, சிங்கப்பூர் இணை அமைச்சுநிலைக் குழு' 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாண்டில் தான் சந்திக்க முடிந்தது.
சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகிய இருவரின் தலைமையிலும் நேற்றைய சந்திப்புக் கூட்டம் நிகழ்ந்தது. பிரதமர் அலுவலக அமைச்சர் (பொருளியல் பிரிவு) முஸ்தபா முகம்மது, தற்போதைய ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது ஆகியோர் மலேசியாவைப் பிரதிநிதித்தனர்.
தொழில்துறை ஒத்துழைப்பு, சுற்றுப்புறம், சுற்றுப்பயணம், போக்குவரத்து இணைப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பில் இருதரப்பு பணிக்குழுக்கள் முன்னேற்றம் கண்டது குறித்து நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது.
தனிமை உத்தரவின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின் வெற்றியும் குறிப்பிடப்பட்டது. மாறிவரும் பொதுச் சுகாதார சூழலைக் கருத்தில் கொண்டு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று இருதரப்புகளும் தெரிவித்தன. மீண்டும் அடுத்த ஆண்டு இடைப்பகுதியில் அமைச்சுநிலைக் குழு சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

