புதிய மதிப்பெண் அமைப்புமுறையைப் பின்பற்றிய இவ்வாண்டின் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகளைப் பெற்றுக்கொண்ட ஆறாம் வகுப்பு மாணவர்களில் 80 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோருக்குத் தாங்கள் விரும்பிய உயர்நிலைப் பள்ளியில் இடம் கிடைத்துள்ளது.
முதல் மூன்று இடங்களில் தங்களுக்கு விருப்பமான உயர்நிலைப் பள்ளிகளை இப்பிரிவினர் குறிப்பிட்டிருந்ததாகவும் அவற்றில் ஒன்று கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது.
ஆறு உயர்நிலைப் பள்ளி தெரிவுகளையும் குறிப்பிட்டிருந்த மாணவர்களில் 90 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோருக்கு அப்பட்டியலில் இடம்பெற்ற உயர்நிலைப் பள்ளி கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மாணவர்களுக்கு நேற்று அவர்களது உயர்நிலைப் பள்ளி முடிவுகள் தெரிவிக்கப்பட்டது.
உயர்நிலைப் பள்ளி என்ன என்பதை அறிந்த உடனே மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளுக்குச் செல்லத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இணையம் வாயிலாக புத்தகங்கள், சீருடைகளை வாங்குவது, புத்தகப் பட்டியல், பள்ளி முதல் நாள் ஆகியவற்றின் தொடர்பில் பள்ளிகளின் இணையத்தளங்களை மாணவர்கள் நாடினால் தகவல் அறியலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
'பேரண்ட்ஸ் கேட்வே' செயலியைப் பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு, உயர்நிலை ஒன்றுக்குச் செல்லவிருக்கும் தங்களின் பிள்ளையின் உயர்நிலைப் பள்ளியிலிருந்து தகவல் கிடைக்கும்.
அடுத்த ஆண்டு பள்ளி முதல் நாளான ஜனவரி 4ஆம் தேதியன்று தங்களின் உயர்நிலைப் பள்ளிக்குப் போக முடியாத மாணவர்கள், பள்ளியுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பள்ளியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதிசெய்திடலாம்.
அதற்கேற்ப பள்ளியும் அவர்களுக்காக அவ்விடத்தை ஒதுக்கிடும். கூடுதல் விவரம் பெற, கல்வி அமைச்சின் இணையத்தளத்தை நாடலாம்.

