இணையத்தளங்கள் மூலம் 'ஹயட் தஹ்ரிர் அல்-ஷாம்' (எச்டிஎஸ்) எனும் பயங்கரவாதக் குழுவுக்குக் கிட்டத்தட்ட $900 நிதி அனுப்பியதன் தொடர்பில் பங்ளாதேஷை சேர்ந்த 27 வயது அகமது ஃபைசால் (படம்) நேற்று நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு வழி முன்னிலையானார்.
பயங்கரவாதம் (நிதி ஒடுக்கும்) சட்டத்தின் கீழ் ஃபைசால் மீது 15 குற்றச்சாட்டுகள் பதிவாகின.
கட்டுமான ஊழியராக ஃபைசால் இங்கு 2017ஆம் ஆண்டில் வேலை செய்யத் தொடங்கியதாகவும் மறு ஆண்டில் சுயதீவிரவாதச் சிந்தனைக்கு ஆளானதாகவும் உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
பின்னர், ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அங்கு சென்று சிரியா அரசாங்கத்துடன் போரிட விரும்பியதாகவும் கூறப்பட்டது.
ஃபைசாலின் கடப்பாடு பின்னர் சிரியாவில் இஸ்லாமிய கலீபகம் ஒன்றை நிறுவுவதில் தீவிரமாக உள்ள 'எச்டிஎஸ்' போராளி அமைப்பின் பக்கம் 2019ஆம் ஆண்டு நடுப்பகுதியில் சென்றது.
"பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது ஆகியவற்றைத் தடுப்பது, ஒடுக்குவது தொடர்பில் ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றம் கொண்டுள்ள தீர்மானங்களின் கீழ் 'எச்டிஎஸ்' ஒரு பயங்கரவாத அமைப்பாகக் குறிப்பிடப்படுகிறது," என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஃபைசால் வெவ்வேறு இணையத்தளங்கள் மூலம் பணத்தை அனுப்பி இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. சிரியாவில் 'எச்டிஎஸ்' திட்டமிட்டிருப்பதற்கு ஒரு பகுதியாக அல்லது முழுமையாகத் தான் அளித்த நிதி பலன் அளித்திருக்கும் என்பதைத் தான் அறிந்திருந்தார் என்று அமைச்சு தெரிவித்தது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பின்னர் கைது செய்யப்பட்ட ஃபைசாலுக்கு தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதியன்று ஃபைசால் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள எண்ணம் கொண்டிருப்பதாக நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

