மது அருந்திவிட்டு தன்னுடன் ஒரே தங்குவிடுதியில் வசிக்கும் ஆடவரை முகத்தில் குத்தியதுடன் அவரது விரலையும் கடித்து அதில் முறிவை ஏற்படுத்தினார் 30 வயது இந்திய நாட்டவர் ரெங்கசாமி கார்ல்மாக்ஸ்.
இருவரும் தரையில் உருண்டு புரண்டு ஒருவரையொருவர் தொடைப் பகுதியிலும் கடித்ததாகக் கூறப்பட்டது. பின்னர் மற்ற தங்குவிடுதிவாசிகள் வந்து சண்டையைத் தடுத்து நிறுத்தினர்.
குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்ட கார்ல்மாக்சுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தில், செம்பவாங் வட்டாரத்தில் உள்ள தங்குவிடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து திரு கிருஷ்ணன் கார்த்திகேயன், 35, தனது தண்ணீர் புட்டியில் நீர் நிரப்புவதற்காக ஏற்கெனவே அதில் இருந்த நீரை வெளியே ஊற்றினார்.
இரண்டாவது மாடியில் நின்றுகொண்டிருந்த கார்ல்மாக்ஸ் மீது தண்ணீர் பட்டதால் உடனே மேல் மாடியில் இருந்த கிருஷ்ணனை வழிமறித்து நடந்ததைப் பற்றி கேட்டார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோதும் அது கைகலப்பாக அன்று மாறவில்லை.
பின்னர், செப்டம்பர் 5ஆம் தேதியன்று தன் அறைக்கு வெளியே மது போதையில் இருந்த கார்ல்மாக்சுக்கு, மீண்டும் மூன்றாவது மாடியிலிருந்து தண்ணீர் பட்டதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.
முன்னதாக நடந்த சம்பவம் அவர் நினைவுக்கு வரவே, திரு கிருஷ்ணனை மீண்டும் சந்திக்க மேல் மாடிக்குச் சென்றார்.
தம் குடும்பத்தாரிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணனை, மூக்கில் குத்தியதுடன் தரைக்குத் தள்ளினார் கார்ல்மாக்ஸ். இதனால் கிருஷ்ணன் தலையில் அடிப்பட்டது.
கீழே கிடந்த கிருஷ்ணனை கார்ல்மார்க்ஸ் பலமுறை குத்தியதுடன் அவரின் மோதிர விரலையும் கடித்து ரத்தம் கசியச் செய்தார்.
பின்னர், இருவரும் தரையில் புரண்டவாறு தொடைப் பகுதியில் ஒருவரை ஒருவர் கடித்துக்கொண்டனர்.
கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட காயங்களுக்கான மருத்துவச் செலவு $3,880. இதை அவரின் முதலாளி ஏற்றுக்கொண்டார்.
தடுப்புக் காவலின்போது தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் கார்ல்மாக்ஸ் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

