பொது இடத்தில் ரகளை செய்ததும் இல்லாமல் கைதான பின்னர் காவல் அதிகாரி ஒருவரையும் இனவாதப் பேச்சால் அவமதித்ததற்காக 31 வயது ஊய் ஜியா ஜுன் என்பவருக்கு $3,800 அபராதம் விதிக்கப்பட்டது.
செங்காங் வட்டாரத்தில் உள்ள ஆங்கர்வேல் ரோடு புளோக் ஒன்றுக்கு சிங்கப்பூரரான ஊய் அக்டோபர் 20ஆம் தேதியன்று சென்றிருந்ததாகவும் ஒன்பதாவது மாடியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் கதவை இரவு 11 மணியளவில் ஊய் பலமாகத் தட்டிக்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
நிதானமாக நடந்துகொள்ளுமாறு அங்கு வந்த அதிகாரிகள் பலமுறை கூறியும், ஊய் அடங்க மறுத்தார்.
பின்னர், கைது செய்யப்பட்ட ஊய் காவலர்களின் வாகனத்தில் ஏற்றப்பட்டார். காவல் அதிகாரிகளால் உட்லண்ட்ஸ் காவல் பிரிவுத் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில், காவல்நிலைய ஆய்வாளர் நூர் யுஸ்மான் அப்துல் கனியை ஊய் தகாத சொற்களால் திட்டினார்.
அதே அதிகாரியை நோக்கி இனவாதச் சொற்களையும் ஊய் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

