ஓசிபிசி வங்கி எச்சரிக்கை; 26 பேர் $140,000 பணத்தை இழந்த மோசடி

ஓசிபிசி வங்கி எச்சரிக்கை; 26 பேர் $140,000 பணத்தை இழந்த மோசடி

1 mins read
0d3af2fa-e2d0-44d2-a863-b529903bcb86
ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மோசடிக்காரர்கள் அனுப்பிய போலி குறுஞ்செய்திகள். படம்: ஓசிபிசி வங்கி -

ஓசிபிசி வங்கி, தன்னைப் போல நடித்து குறுஞ்செய்தி அனுப்பி பணத்தைத் திருடும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது.

டிசம்பர் 8 முதல் 17ஆம் தேதி வரையிலான பத்து நாள்களில், 26 வாடிக்கையாளர்கள் இத்தகைய மோசடிகளில் மொத்தம் $140,000 பணத்தை இழந்துள்ளனர்.

ஓசிபிசி வங்கி வியாழக்கிழமை (டிசம்பர் 23) அன்று இவ்வாறு கூறியது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் தன் இணையத்தளத்தைப் போன்ற மோசடி செய்த 45 போலி இணையத்தளங்களைக் கண்டுபிடித்து, அவற்றை முடக்கியதில் முன்னின்று உதவியதாக ஓசிபிசி கூறியது.

வழக்கமாக ஒரு மாதத்தில் சராசரியாக இத்தகைய எட்டு போலி இணையத்தளங்கள்தான் முடக்கப்படும் என்று அது குறிப்பிட்டது.

தங்கள் வங்கிக்கணக்குகள் அல்லது கடன் பற்று அட்டைகளில் சிக்கல் இருப்பதாகக் கூறி, வங்கி அனுப்புவது போன்று பொதுமக்களுக்கு போலி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன.

அந்தக் குறுஞ்செய்திகளில் வங்கியின் உண்மையான இணையத்தளம் போலவே தெரியும் போலி இணையத்தளத்துக்குச் செல்லும் இணைப்பும் இடம்பெறும்.

அந்தப் போலி இணையத்தளங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும் மறைச்சொற்களையும் கோரும்.

வங்கிக் கணக்கில் பிரச்சனை உள்ளதால் அது மூடப்பட்டுவிட்டது என்பதையும் அதை மீண்டும் இயக்குவதற்கான இணையத்தள விவரங்களையும் தான் குறுஞ்செய்திவழி அனுப்புவதில்லை என்று ஓசிபிசி கூறியது.

இத்தகைய விவரங்கள் அஞ்சல் கடிதங்கள் வழியாகத் தான் அனுப்பப்படும் என்று அது குறிப்பிட்டது.