தெம்பனிஸ் அவென்யூ 1, தெம்
பனிஸ் அவென்யூ 10 ஆகிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த மோசமான விபத்தில் 59 வயது ஆடவர் ஒருவர் மாண்டார். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சியில், அந்த விபத்தில் நான்கு கார்கள், ஒரு டாக்சி, ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மறுதிசை சாலையில் சென்றுகொண்டிருந்த சிவப்புநிற மெர்சிடிஸ் பென்ஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, சாலைச் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது பறந்துவந்து மோதியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
விபத்து குறித்து நேற்று முன்தினம் இரவு 11.10 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று தெரிவித்த காவல்துறையினர், விபத் தில் காயமுற்று, மயக்கநிலையில் இருந்த 59 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் பின்னர் அங்கு அவர் மரணமுற்றார் என்றும் தெரிவித்தனர். 22 வயது முதல் 38 வயது வரையிலான நான்கு ஆடவர்கள் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் காருக்குள் சிக்கிக்கொண்ட ஆடவரை மீட்புச் சாதனம் கொண்டு மீட்டனர்.
மதுபோதையில் காரோட்டியதற்காக 33 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்தது. காவல்துறை விசாரிக்கிறது.

