பள்ளி நாட்களிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி: பரிசீலிக்க வேண்டுகோள்
தடுப்பூசி போட அழைக்கப்பட்ட மூன்றில் ஒரு குழந்தைக்கும் மேல் அவர்களின் பெற்றோரால் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளனர். குழந்தைத் தடுப்பூசிக்கான டிசம்பர் மாத முன்பதிவு அனைத்தும் நிரம்பிவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் பள்ளிகளிலும் மதரசா பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு தொடக்கநிலை 4 முதல் 6 வரை செல்லக்கூடிய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான அழைப்பு அனுப்பப்பட்டது. தடுப்பூசி பதிவு கடந்த புதன்கிழமை தொடங்கியதும் குழந்தைகளின் பெற்றோருக்கு சுமார் 110,000 குறுந்தகவல்கள் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டது. தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யுமாறு அந்த அழைப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அமைச்சு கூறியது. மேலும், பதிவுக்கான இணைப்பும் அந்த குறுந்தகவலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஜனவரி மாதத்திற்கான வாரயிறுதி தடுப்பூசி நடவடிக்கைக்கு முன்வந்தோர் விகிதம் சிறப்பாக இருப்பதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வியாழக்கிழமை இரவு தமது ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். அதேநேரம், வார நாட்களிலும் தங்களது குழந்தைக்கு தடுப்பூசி போடுவது பற்றி பெற்றோர் பரிசீலிக்க வேண்டும் என்றும் பள்ளி நாட்களில் தடுப்பூசி போட்ட பின்னர் பாதிக்கப்படும் குழந்தை
களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவகத்திற்கு விதிக்கப்பட்ட
ஒருமாதத் தடை விலகியது
சுகாதாரக் குறைபாடு காரணமாக 'கேட்டரர் ஆன் அண்ட் ஆன் டைனர்ஸ்' உணவகத்தை தற்காலிகமாக மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விலக்கப்பட்டுள்ளது. அந்த உணவகம் நேற்று (டிசம்பர் 24) முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 73 பேர் இரைப்பைக் குடல் அழற்சிக்கான அறிகுறிகள் காரணமாக பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து நவம்பர் 23 முதல் கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அந்த உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டது.
அட்மிரல்டி கடைத்தொகுதியில் அமைந்துள்ள அந்த உணவகம் சிங்கப்பூர் உணவு அமைப்பின் நிபந்தனை
களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக இரு அரசாங்க அமைப்புகளும் கூட்டாகத் தெரிவித்துள்ளன. கெட்டுப்போகும் தன்மை கொண்ட அத்தனை உணவு வகைகளையும்
அப்புறப்படுத்திவிட்டு உணவகத்தின் சமையலறையும்
பாத்திரங்கள் மற்றும் மேசை, தரை அனைத்தும் துரப்புரவு செய்யப்பட்டு உள்ளதாக அவை தெரிவித்தன. இருப்பினும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக அந்த உணவகம் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்தினுள் வைக்கப்படும் என்றும் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

