தீவு விரைவுச் சாலை வழியாக மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகள் இப்போது ஓயாது எனத் தெரிகிறது.
தீவு விரைவுச் சாலையிலிருந்து லோர்னி ஹைவேக்கு இட்டுச் செல்லும் பாதையில் ஒரு வழித் தடம் மூடப்படுவதால் வாகனமோட்டிகள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
லோர்னி ஹைவே திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் சாலையைச் சுற்றியுள்ள பணிகள் முடிக்கப்படவில்லை.
முந்தைய ஒப்பந்ததாரருக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சினையை இதற்கு காரணம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
சாலையோர தண்ணீர் வடியும் பணிகள், கால்வாய் அமைக்கும் பணி, தடுப்புகளின் மேல்பூச்சு உள்ளிட்ட வேலைகள் அடுத்த ஆண்டு நான்காவது காலாண்டில் முடிவடையும் என ஆணையம் நம்பிக்கை தெரிவித்தது.
முந்தைய ஒப்பந்ததாரரான சுவி ஹோங் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் கலைக்கப்பட்டது. இவ்வேளையில் கொவிட்-19 சூழலால் கட்டுமானத்துறை பாதிக்கப்பட்டதால் புதிய ஒப்பந்ததாரரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது. எஞ்சிய பணிகளை முடிக்க கடந்த மே மாதம் மெகாஸ்டோன் ஹோல்டிங்ஸ் என்ற புதிய நிறுவனம் நியமிக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
லோர்னியிலிருந்து வெளியேறும் பாதை மற்றும் லோர்னி சாலையைச் சுற்றியுள்ள பணிகள் உச்சநேரமில்லாத நேரத்தில் ஒரு வழித் தடம் மட்டுமே மூடப்பட்டு மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.
புக்கிட் பிரவுன் சாலை என்று முன்பு அழைக்கப்பட்ட லோர்னி ஹைவேயின் முதல் கட்டம் பலமுறை தாமதத்துக்குப் பிறகு 2018 அக்டோபர் 28ஆம் தேதி திறக்கப்பட்டது.
தாம்சனை நோக்கிச் செல்லும் ஆடம் முதல் ஃபேரர் சாலைகள் வரை நீண்டுள்ள லோர்னி ஹைவே 2019 ஏப்ரல் 19ஆம் தேதி முழுமையாகத் திறக்கப்பட்டது.

