வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிவரை சோதனை
நிலப் போக்குவரத்து ஆணையம் கிறிஸ்மசுக்கு முதல் நாளன்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது.
மோட்டார் பொருத்தப்பட்ட நடமாட்டச் சாதனங்களை நடைபாதையில் ஓட்டிச்சென்றது போன்ற தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான 111 குற்றச் செயல்களை ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
காவல்துறை, தேசிய பூங்காக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் ஈடுபட்ட அந்தச் சோதனை நட வடிக்கை வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி வரை நடந்தது. தனிநபர் நடமாட்டச் சாதனங் களை நடைபாதைகளில் ஓட்டிச் செல்லக்கூடாது என்று சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது.
அதற்கு முன்பாக, 2019ஆம் ஆண்டில் இத்தகைய சாதனங்கள் சம்பந்தப்பட்ட சுமார் 4,900 குற்றச் செயல்கள் நிகழ்ந்தன. மின்ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் ஓட்டிச் செல்லக்கூடாது என்று 2019ஆம் ஆண்டு நவம்பரில் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் அதிகாரிகள் கடந்த புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வாகனம் தொடர்பிலான 215 குற்றச்செயல்களைக் கண்டுபிடித்தன.
புகைபோக்கிச் சாதனங்கள், பதிவு எண் தகடு தொடர்பிலான திருத்தங்கள் அந்தக் குற்றச்செயல்களில் அடங்கும். 10 நடமாட்டச் சாதனங்களும் ஆறு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையம் நேற்று தெரிவித்தது.
விதிமுறைகளையும் வழிகாட்டி முறைகளையும் பின்பற்றி நடந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆணையம் நினைவூட்டியது.
சிங்கப்பூரில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் நடப்புக்கு வருகின்றன. சாலைகளில் சேர்ந்து சைக்கிளோட்டிச் செல்ல அந்த விதிமுறைகள் வரம்புகளை விதிக்கின்றன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சைக்கிளோட்டிகளுக்கு ஜனவரி 1 முதல் அபராதம் இரண்டு மடங்காகும்.
கடும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சைக்கிளோட்டிகளுக்கு முதல் தடவை குற்றம் செய்திருந்தால் $1,000 வரை அபராதம், மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை உண்டு. மறுபடியும் குற்றம் செய்வோருக்கு $2,000 வரை அபராதம் மற்றும் அல்லது ஆறு மாதம் வரை சிறை விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் சாலைகளில் சென்ற ஆண்டில் சைக்கிள் சம்பந்தப்பட்ட 597 குற்றச் செயல்கள் நிகழ்ந்தன. 2019ல் இவற்றின் எண்ணிக்கை 1,302 ஆக இருந்தது என்று போக்குவரத்து காவல்துறை கூறியது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 500க்கும் மேற்பட்ட சைக்கிளோட்டிகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கடந்த அக்டோபர் மாதம் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

