கொவிட்-19 தொற்று உள்ள சிறார் அவர்களின் குடும்பங்களைவிட்டு பிரிக்கப்படுவதில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கொவிட்-19க்கு எதிராக சிங்கப்பூர் அமல்படுத்தும் கட்டுப்பாடுகள் பற்றி புளூம்பர்க்கில் வெளியான ஒரு தகவல் தொடர்பில் அளித்த விளக்கத்தில் அமைச்சு இவ்வாறு கூறி உள்ளது.
அடையாளம் தெரியாத சிலர் கூறுவதாக ஒரு தகவலை டிசம்பர் 23ஆம் தேதி புளூம்பர்க் வெளியிட்டது.
வீடுகளில் இருந்து தாங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு முன்பின் தெரியாதவர்களுடன் தனிமையில் தங்க வைக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். கண்காணிக்க யாருமில்லாத நிலையில் தங்கள் பிள்ளைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படியும் தங்களுடைய வளர்ப்புப் பிராணிகளைக் கைவிடும்படியும் தங்களிடம் கூறப்பட்டது என்றும் அந்த அனாமதேய நபர்கள் தெரிவித்ததாக புளூம்பர்க் தகவல் வெளியிட்டது.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சு தனது ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு ஆற்றலைக் கூடுமானவரை திறம்பட பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கொவிட்-19 நோயாளி, மற்றொரு கொவிட்-19 நோயாளியுடன் பராமரிப்பு நிலையத்தில் தனித்து வைக்கப்படக்கூடும் என்று குறிப்பிட்டது.
இருந்தாலும் புளூம்பர்க் தகவல் தெரிவித்ததைப் போல் அல்லாமல் சிறார், அவர்களின் குடும்பத்தைவிட்டு பிரிக்கப்படுவது இல்லை என்று அமைச்சு விளக்கமளித்தது.
12 வயது, அதற்குக் குறைந்த வயதுள்ள பிள்ளைகள் பராமரிப்பாளர் ஒருவருடன் தங்கி இருப்பார்கள். 13 முதல் 19 வரை வயதுள்ளவர்கள் பராமரிப்பாளரின் எழுத்து மூலமான இணக்கத்துடன் மட்டும் தனிமையில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தடைக்காப்பு அல்லது தனிமையில் வைக்கப்படும் 12 மற்றும் அதற்குக் குறைந்த வயதுள்ள பிள்ளைகள் அனைவரோடும் பராமரிப்பாளர் உடனிருந்து வந்துள்ளார் என்பது பரிசோதனை மூலம் தெரிய வருவதாக அமைச்சு கூறியது.
இந்தப் பொது சுகாதார நடவடிக்கைகள் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டினர் அனைவருக்கும் பொருந்தும் என்று அமைச்சு விளக்கியது.
இந்த நடவடிக்கைகள், ஓமிக்ரான் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஏதுவாக இடம்பெறும் தற்காலிக ஏற்பாடுதான் என்றும் நிலவரங்களுக்கு ஏற்ப இவை சரிசெய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

