மார்பகப் புற்றுநோய் அறநிறுவனம் ஏற்பாட்டில் நேற்று இளஞ்சிவப்பு நாடா பெருநடை 2021 நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அந்த 13 கி.மீ. பெருநடையில் கலந்துகொண்டார்.
மரினா பே சேண்ட்சில் இருந்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா வரை இடம்பெற்ற அந்தப் பெருநடை நிகழ்ச்சி மூலம் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவது இலக்கு.
அந்தப் பெருநடை நிகழ்ச்சி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை ஏறத்தாழ 1,780 பேர் அதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
இதன்மூலம் கிடைக்கும் நிதி, இந்த அறநிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கும் சேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
சின் மிங் பகுதியில் உருவாகும் புதிய மார்பகப் புற்றுநோய் நிலையத்திற்கும் அந்தத் தொகை உதவும்.
குமாரி இந்திராணி ராஜாவின் சகோதரி 1990களில் மார்பகப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துவிட்டார். அப்போது அந்த நோய் பற்றிய புரிந்துணர்வு அவ்வளவாக இல்லை.
"இளம் வயதில் நோய்களைப் பற்றி அவ்வளவாக யாரும் சிந்திப்பதில்லை. உங்களில் யாருக்காவது அல்லது உங்கள் அன்பர்களில் யாருக்காவது அத்தகைய நிலை ஏற்பாட்டால் மட்டுமே அது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
"ஆகையால் இந்த நோய் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்தவேண்டியது என்னை பொறுத்தவரை முக்கியமானதாக தெரிகிறது," என்று அமைச்சர் கூறினார்.

