ஓமிக்ரான் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் பத்து ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சிங்கப்பூர் வர, சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
இனி போட்ஸ்வானா, எஸ்வாட்டினி, கானா, லெசோத்தோ, மலாவி, மொசாம்பிக், நமிபியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் சிங்கப்பூருக்கு வரலாம் அல்லது இங்கிருந்து வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த நாடுகளுக்குக் கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்டிருந்தோரும் இனி சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கப்படுவர். அவர்கள் இங்கிருந்து வேறு நாடுகளுக்கும் பயணம் செய்யலாம்.
மேல் குறிப்பிடப்பட்ட பத்து ஆப்பிரிக்க நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, அண்மையில் அங்கு பயணம் மேற்கொண்ட நீண்டகால குடிநுழைவு அட்டை வைத்திருப்போரும் குறுகிய கால குடிநுழைவு அனுமதி கொண்டோரும் நான்கு வாரங்களுக்குச் சிங்கப்பூருக்கு வர முடியாது அல்லது இங்கிருந்து வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஓமிக்ரான் கிருமி உலகெங்கும் பரவியுள்ளதால் இந்த 10 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சு
கூறியது.
இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவர்.
"உலகளாவிய நிலை மாறி வருகிறது. கொவிட்-19 கிருமித்தொற்றை மீள்திறனுடன் எதிர்கொள்ளும் நாடாகத் திகழ நாம் இலக்கு கொண்டுள்ளோம். அதன்படி மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நமது எல்லைக் கட்டுபாடுகள் மாற்றி அமைக்கப்படும்," என்று சுகாதார அமைச்சு கூறியது.
ஆக அண்மைய எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ள சேஃப்டிராவல் இணையப்பக்கத்துக்குச் சென்று பார்க்கும்படி பயணிகள் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.

