சிங்கப்பூரில் ஓமிக்ரான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை யாருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நோய்வாய்ப்பட்டோருக்குக் கூடுதல் உயிர்வாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பதாலும் இளம் வயதினர் என்பதாலும் இந்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அமைச்சு கூறியது.
கடந்த சனிக்கிழமை நில
வரப்படி சிங்கப்பூரில் மேலும் 546 பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 443 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். 103 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமிக்ரான் கிருமித்தொற்றால் ஏற்கெனவே பாதிப்படைந்தோருடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 13 பேருக்குக் கடந்த ஒரு வாரத்தில் அக்கிருமி பரவியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக சமூக அளவில் 78 பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
பெருமளவிலான ஓமிக்ரான் பரவலை தடுப்பூசி தடுப்பதாக வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக கொவிட்-19க்கு எதிரான அமைச்சுநிலை பணிக்குழு தெரிவித்தது.
கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்கவும் கடுமையான பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தைப் போட்டுக்கொள்வது முக்கியம் என்பதை பணிக்குழு வலியுறுத்தியது.
தற்போது 110 நாடுகளுக்கு ஓமிக்ரான் கிருமி பரவியுள்ளது. குறிப்பாக, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டன், டென்மார் போன்ற பல நாடுகளில் டெல்டாவைவிட அதிகமானோரைப் பாதித்துள்ள கிருமி வகையாக ஓமிக்ரான் உருவெடுத்துள்ளது.

