ஐவரில் இரண்டு அதிகாரிகள் திட்டப்பட்டனர் அல்லது தாக்கப்பட்டனர்: ஆய்வு
பாதுகாப்பு அதிகாரிகள் வேலை யிடத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிப்பதற்காக புதிய கைப்பேசிச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாவல் அதிகாரிகளின் நலன் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிட்டபோது இந்தச் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டு பாதுகாவல் அதிகாரிகளில் ஒருவர், வேலையிடத்தில் பதற்றம் அல்லது மனஅழுத்தத்துக்கு ஆளாவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
செயலியை அறிமுகப்படுத்திய 'யுஎஸ்இ' எனும் பாதுகாவல் ஊழியர்கள் சங்கம், வேலை தொடர்பான எந்தப் பிரச்சினையையும் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் ஊழியர் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது.
தாங்கள் முறைகேடாக நடத்துவது குறித்து எங்கு யாரிடம் தொடர்புகொண்டு உதவி கேட்பது என்பதை பாதுகாவல் அதிகாரிகள் ெதரிந்து வைத்துள்ளனர். இருந்தாலும் நடுநிலையான 3ஆம் தரப்பு விசாரணைகள் உட்பட மேலும் பலவற்றை செய்து மேம்படுத்த வாய்ப்புள்ளது என்று யுஎஸ்இயும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தன.
கைப்பேசி செயலியில் முன் பதிவு செய்தவர்கள், சம்பவம் அல்லது பிரச்சினை, இடம், புகைப்படம் போன்ற விவரங்களுடன் புகார் செய்ய முடியும். அப்படி பதிவு செய்யப்பட்ட புகார்கள் சமரச சேவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது சமரச நிலையத்துக்கு நேரில் வந்து அல்லது மின்அஞ்சல் வழியாக அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் புதிய செயலி பேருதவியாக இருக்கும் என்று யுஎஸ்இயின் நிர்வாகச் செயலாளரான ஸ்டீவ் டான் குறிப்பிட்டார்.
பணியில் இருக்கும்போது மின்அஞ்சல் வழியாக புகார் தெரிவிப்பது சிரமமாக இருப்பதாக அதிகாரிகள் பலர் கூறியதால் செயலி உருவாக்கப்பட்டது என்றார் அவர்.
"யாராவது திட்டினாலோ அல்லது சம்பவத்தையோ செயலி வழியாக உடனடியாக தெரிவிக்கலாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரிந்துவிடும்," என்று திரு டான் சொன்னார்.
புதிய செயலி மூலம் சிங்கப்பூரில் உள்ள 40,000 அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும் என்று யுஎஸ்இ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பாதுகாவல் அதிகாரிகள் மன நலன், தவறாக நடத்துவது உள்ளிட்டவை தொடர்ந்து கவலையளிக்கும் அம்சமாக இருந்து வருவதை யுஎஸ்இ மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு ஜூலை முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்டது.
ஏறக்குறைய ஐவரில் இரண்டு பேர், பணியில் இருக்கும்போது திட்டப்பட்டதாகவோ, தாக்கப்பட்ட தாகவோ தெரிவித்துள்ளனர். இது, அன்றாட நடக்கும் பிரச்சினையாக வும் உருவாகி வருகிறது.
பெரும்பாலான சம்பவங்களில் மூத்த அதிகாரிகளே பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஆய்வில் ஆயிரம் அதிகாரிகள் பங்கேற்றனர்.

