செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
562c63fc-02f0-4cb1-816d-ecda9e6ab1ee
-

சீனப் புத்தாண்டு சந்தை இல்லை

இரண்டாவது ஆண்டாக இவ்வாண்டும் சீனப் புத்தாண்டு சந்தை இருக்காது. கொவிட்-19 கொடுமையே இதற்கு காரணம். ஆனால் சாலையோரக் கடைகள், பிப்ரவரி 1ஆம் தேதி விடியற்காலை வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமிப் பரவல் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வருவது சந்தேகம். மேலும் வாடகைக் கட்டணமும் அதிகரித்துள்ளது. இதனால் குறைவானவர்களே கடைகளை வைக்க முன்வருவார்கள் என்று கூறப்படுகிறது.

போர்க் கப்பலை காட்சியகமாக

மாற்ற கோரிக்கை வலுக்கிறது

சிங்கப்பூர் கடற்படையின் 'ஆர்எஸ்எஸ் ரிசல்யூஷன் L204' போர்க் கப்பல் 1985ல் தைவானிலிருந்து தாயகத்துக்கு திரும்பியபோது அதன் பல பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இரண்டு சூறாவளி மற்றும் அலைகளால் தாக்கப்பட்டதால் சில விரிசல்கள் பெரிய அளவில் இருந்தன.

ஆனால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதற்கு அடையாளமாக விளங்கும் அந்தப் போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடற்படை அருங்காட்சி யகத்தில் அதனைக் காட்சிப் பொருளாக நிறுத்த வேண்டும் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையம் வழியாக மனு சமர்பித்துள்ளனர். இந்தக் கப்பலில் பணியாற்றிய முன்னாள் சிப்பந்தியான ரேமண்ட் லிம் நான்கு வாரங்களுக்கு முன்பு இந்தக் கோரிக்கையை தொடங்கினார்.

250,000 குடும்பங்களுக்கு

போக்குவரத்து பற்றுச்சீட்டு

இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து ரயில், பேருந்து கட்டணங்கள் சில காசுகள் அதிகரித்துள்ளதால்

அதனைச் சமாளிக்க தகுதி பெறும் 250,000 குடும்பங்களுக்கு போக்குவரத்து பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தூரத்தைப் பொறுத்து பேருந்து, எம்ஆர்டி ரயில் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு காசுகள் அதிகரித்துள்ளன. சலுகைக் கட்டணம் பெறும் மூத்த குடிமக்கள், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், வருமானம் குறைந்த ஊழியர்கள் ஆகியோருக்கான கட்டணம் ஒரு காசு கூடியது.

சில நாட்களுக்கு முன்பு தகுதிபெறும் நபர்களுக்கு முப்பது வெள்ளி மதிப்புள்ள போக்குவரத்து பற்றுச்சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 600,000 போக்குவரத்து பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட விருக்கின்றன.