சிறுமிகளிடம் பாலியல் உறவு குறித்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் 17 பெண்ணிடமும் இளையர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
சிங்கப்பூரரான 23 வயது அமர் பக்டியர் முஹமட் அலி நேற்று தம் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்முறை, வயது குறைந்த சிறுமி களிடம் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு மொத்தம் ஆறு ஆண்டுகள், பத்து மாதங்கள் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
இவர் மீதான இதர ஐந்து குற்றச்சாட்டுகளையும் நீதிபதி தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் எடுத்துக்கொண்டார். 2016ல் நடந்த சம்பவத்தில் 12 வயது சிறுமியை வீடியோ விளையாட்டு விளையாடுவதற்காக ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள தனது வீட்டுக்கு அவர் அழைத்திருந்தார். ஆனால் அந்தச் சிறுமி யிடம் தனது ஆசையைத் தீர்த்துக் கொள்வதுதான் இளையரின் நோக்கமாக இருந்தது என்று நீதிமன்றத்தில் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் கிளைர் போ தெரிவித்தார். இருவரும் வீட்டுக்குச் சென்றனர். சிறுமியை அமர் தனது அறைக்கு இட்டுச் சென்றார். அங்கு இருவரும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டனர்.
2017ல் இந்தச் சம்பவம் குறித்து ஆலோசகரிடம் சிறுமி தெரிவித்ததால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேறு ஒரு சிறுமி உள்ளிட்ட விவகாரம் தொடர்பிலும் அமர் விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் 2018 ஜூலை 8ஆம் தேதி நடந்த சம்பவத்தில் சமூக ஊடகம் வழியாக அறிமுகமான 17 வயது பெண்ணை வீட்டுக்கு வரச் சொன்னார். அந்தப் பெண்ணிடமும் அமர் தனது ஆசையைத் தீர்த்துக் கொள்ள விரும்பியதாக வழக்கறிஞர் கிளைர் போ கூறினார்.
வீட்டில் அந்தப் பெண்ணின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட அமர் முயற்சி செய்தார். ஆனால் அந்தப் பெண் அமரை தள்ளிவிட்டார். அதே நாளில் காவல்துறையிடம் பெண் புகார் அளித்தார்.

