சுதந்திரத்துக்குப் பிந்திய காலத்தில் சிங்கப்பூரில் பல்வேறு அமைப்புகள் உருவாவதற்கு முக்கிய தூணாக இருந்தவர் என்று கருதப்பட்ட மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு புவா பா லீ நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 89.
திரு புவா, 1968ஆம் ஆண்டில் தெம்பனிஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் திரு புவா, தொடர்பு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1971ல், திரு புவா தற்காப்பு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் அந்தப் பொறுப்பில் 1988 வரை நீடித்து, அரசியலில்இருந்து ஓய்வு பெற்றார்.
1932ஆம் ஆண்டில் பிறந்த திரு புவா, 1959ஆம் ஆண்டில் நன்யாங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, 1960ல் பொதுச் சேவையில் சேர்ந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அரசியலுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
இருபது ஆண்டு அரசியல் வாழ்க்கையில் திரு புவா, முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான காலஞ்சென்ற முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் சுவீயுடன் அணுக்கமாகப் பணியாற்றியுள்ளார்.
திரு கோவுடன் சேர்ந்து வெவ்வேறு வகையான அமைப்புகளை உருவாக்குவதற்கு திரு புவா உதவியுள்ளார்.
உதாரணத்துக்கு, 1972ல் உருவாக்கப்பட்ட சாஃப்ரா எனும் சிங்கப்பூர் ஆயுதப்படை போர்க்காலப் படை வீரர்கள் சங்கத்தின் முதல் தலைவராக 1972 முதல் 1989 வரை பதவி வகித்தார்.
திரு புவா விளையாட்டிலும் கலையிலும் துடிப்புடன் செயல்பட்டார். 1973 முதல் 1979 வரை சிங்கப்பூர் கூடைப்பந்துச் சங்கத்தின் தலைவராகவும் 1977 முதல் கிரேத்தார் ஆயர் மக்கள் அரங்கின் நிர்வாகக் குழுத் தலைவராக இருந்தார்.
சீனத் தெருக்கூத்துக் கலை ஆர்வலரான திரு புவா, ஹாங்காங், தைவான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து தலைசிறந்த தெருக்கூத்துக் கலைஞர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்தார்.
திரு புவா காலமானது குறித்து நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, "திரு புவாவின் மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. இன்று வரை நிமிர்ந்து நிற்கும் தோ பாயோ, புக்கிட் மேரா, தெம்பனிஸ் சாஃப்ரா பொழுதுபோக்கு மன்றங்களின் உருவாகத்துக்கு மிக முக்கிய பங்காற்றிவர் திரு புவா.
"தேசிய சேவையின் வலுவான ஆதரவாளரான திரு புவா, தேசிய சேவையாளர்களின் பங்களிப்புக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஓய்வுக்குப் பிறகு திரு புவா சாஃப்ராவின் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்றார்," என்று தெரிவித்தார்.
"திரு புவா, அடித்தள மக்களுடன் மிகுந்த அணுக்கத் தொடர்பில் இருந்த ஒரு எம்பி. தெம்பனிஸ் எனும் ஒரு கிராமப்புற நகர் வீவக நகரமாக உருமாறுவதை திரு புவா கண்கூடாகப் பார்த்தார். டாக்டர் கோவின் கிரேத்தார் ஆயர் தொகுதியை திரு புவா பார்த்துக்கொண்டார் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டினார்.
"மக்கள் செயல் கட்சியின் விசுவாசமான, வலுவான, முன்னோடித் தொண்டர் திரு புவா. 1988ல் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் கட்சி மற்றும் அடித்தள நிகழ்ச்சிகளிலும் ஆதரவளித்தார்.
"தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றி, காலம் வரும்போது அதை இளையத் தலைவர்களிடம் ஒப்படைத்து, அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளார்," என்றும் பிரதமர் கூறினார்.
தொழிலாளர் இயக்கத்துக்கு திரு புவா ஆற்றிய அயராத பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 1979ல் என்டியுசி அவருக்கு தொழிலாளர் தோழர் எனும் சிறப்பு விருதை அளித்து கௌரவித்தது.
திரு புவாவின் மறைவு குறித்து நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி, "திரு புவா, தெம்பனிஸ் தொகுதி எம்பியாக இருந்தபோது, பாய லேபார் விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக தெம்பனிஸ் கிராமவாசிகளை வீவக வீடுகளுக்கு குடிபெயரும்படி ஊக்குவிப்பதில் பெரும் உதவி செய்தார்.
"புதிய மேம்பாடுகளுக்கு வழிவிடும் வகையில் 13 கிராமத்து சீனக் கோயில்களை ஒருங்கிணைக்க தெம்பனிஸ் சீனக் கோயில் ஒன்றை உருவாக்குவதில் திரு புவா முக்கிய பங்காற்றினார்," என்றார்.
மனைவி 85 வயது திருவாட்டி டான் சியோக் டின், மூன்று பிள்ளைகள் ஆகியோரை விட்டுச் செல்கிறார் திரு புவா பா லீ.

