கடந்த ஆண்டு பிற்பகுதியில் மதுபோதையில் மற்றவர்களை தொந்தரவு செய்ததற்காக $1,000 அபராதம் விதிக்கப்பட்ட ஒரு நபர், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் குற்றம் புரிந்தார்.
இந்த ஆண்டு வெவ்வேறு சம்பவங்களில், அவர் மதுபோதையில் காவல்துறை அதிகாரியையும் பேருந்து ஓட்டுநரையும் மோசமான வார்த்தைகளால் திட்டினார்.
அந்த வகையில், மூன்று துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் பொது இடத்தில் மதுபோதையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்த ஒரு குற்றத்தையும் ஒப்புக்கொண்ட 65 வயதாகும் மூர்த்தி நாகப்பனுக்கு, நேற்று ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துப்புரவுத் தொழிலாளியான அந்தச் சிங்கப்பூரர் இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இரவு 7 மணியளவில் லிட்டில் இந்தியாவிலுள்ள தேக்கா சந்தைக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து சேவை எண் 147ல் ஏறியபோது மதுபோதையில் இருந்தார்.
மேலும் அவர் தமது முகக் கவசத்தை சரியாக அணியவில்லை.அதைச் சரியாக அணியுமாறு பேருந்து ஓட்டுநர் நினைவூட்டியபோது, மூர்த்தி அதிருப்தி அடைந்து, 33 வயதான அந்த ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவல்துறைக்கு இச்சம்பவம் பற்றி தகவல் கொடுக்கப்பட்டது என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் திரு ராஜ் கிஷோர் ராய் கூறினார்.
அடுத்து என்ன நடந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 29ஆம் தேதி அன்று தேக்கா சந்தை அருகே மூர்த்தி மீண்டும் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று பிற்பகல் 1 மணியளவில் அவர், அவ்வழியாகச் செல்பவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரியான 25 வயது சார்ஜண்ட் ஜேசன் சோங் ஜுன் கிட்டும் அவரது சகாக்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூர்த்தியை அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
"சார்ஜண்ட் சோங்கும் அவரது சகாக்களும் மூர்த்தி அந்த வளாகத்தை விட்டு வெளியேறுவதை உறுதிசெய்ய அவரை அழைத்துச் சென்றனர்," என்று வழக்கறிஞர் திரு ராஜ் கூறினார்.
"குற்றம் சாட்டப்பட்டவர் தேக்கா சந்தை முன் சிராங்கூன் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது, மூர்த்தி அவரைச் சுற்றியிருந்த காவல்துறை அதிகாரி களில் ஒருவரை நோக்கி தொடர்ந்து குரல் எழுப்பி எரிச்சலை ஏற்படுத்தினார். பின்னர் அவர் மேலும் கோபம் அடைந்து காவல்துறை அதிகாரியைத் திட்டினார். அதன் பிறகு, மூர்த்தி கைது செய்யப்பட்டார்.
போலிஸ் கன்டோன்மெண்ட் வளாகத்தை நோக்கிச் செல்லும் காவல்துறை வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூர்த்தி, சார்ஜண்ட் சோங்கை தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்த நாளின் பிற்பகுதியில், மத்திய காவல்துறை பிரிவு தலைமையகத்தில் விசாரணைக் காவலில் வைக்கத் தகுதியானவர் என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவ மதிப்பீட்டிற்கு மூர்த்தி உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் மற்றொரு காவல்துறையின் அதிகாரியான 20 வயது செஸ்வென் சீ சின் ஷென்னை நோக்கி ஆபாசமான கை சைகையைக் காட்டினார்.
ஒவ்வொரு துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கும், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்கு ஓர் ஆண்டு வரை சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

