சிங்கப்பூரில் குடும்ப வன்முறையைத் தடுக்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுக்க அமைப்புகளுக்கிடையிலான பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
குடும்ப வன்முறைச் சம்பவங்களால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர், தனிநபர் பாதுகாப்பு ஆணையை மீறும் சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் பின்னணியில் இந்தக் குழு உருவானது.
2019ல் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கோரிய 2,452 தனிநபர் பாதுகாப்பு ஆணை விண்ணப்பங்களில் 4,224 வகையான வன்முறை சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒப்புநோக்க, 2016ல் பாதிக்கப்பட்டவர்கள் கோரிய 2,811 தனிநபர் பாதுகாப்பு ஆணை விண்ணப்பங்களில் 3,497 வகையான வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
அமைப்புகளுக்கிடையிலான பணிக்குழுவுக்கு கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கும் உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முஹம்மது ஃபைசால் இப்ராஹிமும் இணைத் தலைவர்களாகச் செயல்படுகின்றனர்.
குடும்ப வன்முறை தொடர்பிலான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதே பணிக்குழுவின் முக்கிய நோக்கம். கடந்த அக்டோபர் மாதத்தில் பணிக்குழுவின் 16 பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
"இதன் தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் அறிமுகமாகும். குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துதல், திருமணத் தயார்நிலைப் பயிற்சியை மேம்படுத்துதல், வன்முறைக்கு எதிரான தேசிய உதவி தொலைபேசி அழைப்பு எண் ஆகியவை முதலில் அறிமுகமாகும் என்றார் சமு தாய, குடும்ப மேம்பாட்டு அமைச் சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.

