சிங்கப்பூர், இன்னும் சிறிது காலத்திற்கு உள்ளூர் சுற்றுலாவையே நம்பியிருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் பயணத் துறை கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் சுற்றுலா இல்லையென்றால் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொள்ளைநோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சுற்றுலா மேம்பட்ட நிலையில் இருந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட 320 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 'ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டு உள்ளூர் சுற்றுலா வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது. தலா நூறு வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுக்கு மூன்று மில்லியன் சிங்கப்பூரர்கள் தகுதி பெற்றிருந்தனர். டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள் 'ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தாதவர்களுக்கு உள்ளூர் சுற்றுலா தலங்கள் அல்லது ஹோட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய இம்மாதம் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

