துணை காவல்துறை அதிகாரியை தாக்கிய ஆடவருக்கு 11 மாதச் சிறை
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு துணை காவல்துறை அதிகாரி வாகனத்தை நிறுத்தச் சொன்னபோது, கோபம் கொண்ட ஃபிர்தவ்ஸ் ஜூப்ரே அவர் மீது துப்பினார். பின்னர் அவர் அதிகாரியின் முகத்தில் தலைக்கவசத்தைச் சுழற்றி தலையில் அடித்தார்.
2019ல் பாதுகாவல் அதிகாரியை 'ஸ்பானர்' திருகுக் கருவியுடன் எதிர்கொண்டது உட்பட பிற குற்றங்களைச் செய்த ஃபிர்தவ்சுக்கு நேற்று 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 34 வயதான அந்த சிங்கப்பூரர் கடந்த
மே மாதம் 28ஆம் தேதி அன்று பாசிர் ரிஸ் டிரைவ் 1,
பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 51 சந்திப்பை நோக்கி தனது மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தபோது, செர்டிஸ் சிஸ்கோ அதிகாரி அவரை நிறுத்தச் சொன்னார்.
சாலைப் பணிகள் காரணமாக சாலைப் போக்குவரத்தை சீரமைக்க அதிகாரி நியமிக்கப்பட்டார். ஃபிர்தவ்ஸ் நிறுத்த மறுத்ததை அடுத்து, அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரிடம் சற்று காத்திருக்கச் சொன்னார். ஆனால் ஃபிர்தவ்ஸ் அதிருப்தி அடைந்து அதிகாரியை நோக்கிக் கத்தினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஃபிர்தவ்ஸ் திரும்பி வந்து அதிகாரிக்கு அருகில் சென்று அவர் மீது மீண்டும் துப்பினார். ஃபிர்தவ்ஸ், மற்றொரு அதிகாரியை நோக்கி ஆக்ரோஷமாகத் திரும்பி, அவர் தலையிட வேண்டாம் என்று எச்சரித்தார். பின்னர் அவர் தனது கையில் வைத்திருந்த தலைக்கவசத்தை முதலாவது அதிகாரியின் தலையில் அடித்தார்.
பிப்ரவரி 28, 2019 அன்று நடைபெற்ற சம்பவத்தில் உட்லண்ட்ஸில் உள்ள ஜோர்டான் ஃபுட் தொழிலியல் கட்டடத்தில் உள்ள பாதுகாவல் அதிகாரியை நோக்கி 'ஸ்பானர்' திருகுக் கருவியைக் காட்டி மிரட்டினார்.
பெட்ரோல் நிலையத்தில் காசாளராகப் பணிபுரிந்தபோது திருடியவருக்கு சிறை
பலமுறை சிறைக்குச் சென்று திரும்பிய 37 வயது டான் தியான் ஹோக், சீர்திருத்தப் பயிற்சியின் ஓர் அங்கமாக செம்பவாங்கில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையத்தில் ஒரு காசாளராக வேலை செய்ய வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அப்போது ரொக்க இயந்திரத்திலிருந்து அவர் $1,500யைத் திருடினார். அது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
அதேநாளில் நிறுவனத்தின் ரொக்க அட்டையைப் பயன்படுத்தி $495யும் திருடினார். பின்னர் வேலை முடிந்து சென்றபிறகு, டான் தனது மேலதிகாரியை அழைத்து திருடிய பணத்தைக் கடன் அடைக்கப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறினார்.
ரொக்க இயந்திரத்தில் பணம் குறைவது பற்றி மேலதிகாரி டானிடம் விசாரித்தபோது, அந்தக் குற்றத்தை யும் தாம் புரிந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். டானுக்கு 20 முதல் 24 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரினார். இருப்பினும், நீதிபதி, டானுக்கு நேற்று 20 மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

