இவ்வாண்டில் குறைந்தது 413,130 பாக்கெட் கள்ள சிகரெட்டுகள் சிக்கின. அவை காற்றோட்ட விசிறிகள், மெத்தைகள், சீனத் தெய்வ உருவச் சிலைகள், உணவுப் பொட்டலங்கள் என பல வழிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
ஆகக் கடைசியாக, இம்மாதம் 21ஆம் தேதியன்று கான்கிரீட் கற்களை ஏற்றிவந்த மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் 996 பெட்டி வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.
லாரியின் உட்புறத் தரையில் மாற்றங்கள் தென்பட்டதால், அதில் ஏற்றப்பட்ட கான்கிரீட் கற்களை இறக்கி சோதனையிட்டதில், அதனுள் கள்ள சிகரெட்டுகள் இருந்ததை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் கண்டுபிடித்து, கடத்தல் முயற்சியை முறியடித்தனர் என்று நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆணையம் தெரிவித்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சிங்கப்பூருக்கு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்த குறைந்தது 24 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 41,313 பெட்டி சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
ஜனவரி 13ஆம் தேதி, சிங்கப்பூருக்குள் நுழைந்த மலேசிய லாரியில் 11,285 பெட்டிகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மற்றும் சீனக் கடவுள் சிலைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7,685 பெட்டி சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த மாதத் தொடக்கத்தில், இந்தோனேசியாவில் பதிவுசெய்யப்பட்ட 'மாஜு தயா 87' என்ற இழுவைப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,534 பெட்டி வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணை யம், காவல்துறை கடலோர காவற்படை, சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் ஆகியவற்றின் அமைப்புகளுக்கிடையிலான நடவடிக்கைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டன.
இதில், உத்தேசமாக சுங்க வரி ஏய்ப்பு சுமார் $207,820 என்றும் பொருள் சேவை வரி ஏய்ப்பு சுமார் $15,620 என்றும் கூறப்பட்டது. வரி செலுத்தப்படாத பொருட்களை வாங்குதல், விற்பது, அனுப்புதல், விநியோகித்தல், சேமித்தல், வைத்திருப்பது அல்லது கையாள்வது ஆகியவை சுங்கச் சட்டம் மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்கள் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.