சிட்டிபேங்க் வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்காக போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு நபர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையானார்.
தற்போது 31 வயதாகும் முகம்மது நபில் முகமது நாசர், செப்டம்பர் 2018ல் முன்பின் தெரியாத பல நபர்களுடனும் 'ஜாக்சன்' என்று மட்டுமே அறியப்பட்ட ஒருவருடனும் சேர்ந்து சதியில் ஈடுபட்டு வங்கியை ஏமாற்றியதாகவும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
'மைக்ரோசாஃப்ட் ரீஜினல் சேல்ஸ் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, அந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அடிப்படை மாதச் சம்பளமாக $7,258 பெற்றதாகக் கூறி, தனது பெயரில் தவறான ஊதிய விவரங்களை வங்கியில் சமர்ப்பித்ததாக அந்த சிங்கப்பூரர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதன் விளைவாக, சிட்டிபேங்க் வங்கியிடமிருந்து நபில் $13,775 கடனைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
நபில் சிட்டிபேங்க் வங்கியின் ஊழியர் அல்ல என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அறியப்படுகிறது.
இம்மாத தொடக்கத்தில், மேலும் ஒன்பது சிங்கப்பூர் ஆடவர்களும் வங்கி சம்பந்தப்பட்ட ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகினர்.
அவர்களில் மூவரான கிர்க் சுவா மின் சுவான், 28, குருமூர்த்தி சந்திரன், 26, ஜிம் பிரையன் சிம் ஜுன் ஹாங், 26 ஆகியோர் சிட்டி பேங்க் வங்கியில் ஒப்பந்த ஊழியர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மற்றவர்களுடன் சேர்ந்து தவறான வருமான ஆவணங்களைச் சமர்ப்பித்து மொத்தமாக $180,000 கடன் பெற்று வங்கியை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
மற்ற ஆறு ஆடவர்களான இங் ஜியா ஹாவ், 25, இயூஜின் யாப் சியாங், 27, நோவா லூ யு யோங், 27, ஃபூ ஜின் தை, 27, நவின்குமார் ராமகிருஷ்ணன், 28, சுவா ஹோங் வெய், 28 ஆகியோர் எவரும் அப்போது சிட்டிபேங்க் வங்கியில் வேலை செய்யவில்லை.
ஒன்பது பேரும் செப்டம்பர் 2018ல் $24,795 வரை ரொக்கமாக வங்கியைக் கடன் கொடுக்க வைத்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
ஒவ்வொரு மோசடிக் குற்றச்சாட்டுக்கும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

