அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கும் வேளையில் அங்கு கொவிட்-19 பரிசோதனைக் கருவிகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆனால் சிங்கப்பூரில் அவை போதுமான அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் நிறைய பரிசோதனைக்
கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் ஏஆர்டி எனப்படும் கொவிட்-19 சுய பரிசோதனை
கருவிகளுக்கான தேவையும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிக சுய பரிசோதனைக் கருவிகள் இருப்பில் உள்ளதால் அவற்றைக் குறைந்த விலையில் விற்க சில்லறை வர்த்தகர்கள் முயன்று வருகின்றனர்.
அமெரிக்காவில் கொவிட்-19 பரிசோதனைக் கருவிக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் அதற்கு ஏற்ப போதுமான கருவிகளை வழங்க சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் தெரிவித்ததாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் கூறியது. அமெரிக்காவில் பரிசோதனைக் கருவிகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் அவற்றின் விலையை சில மருந்துக்கடைகள் உயர்த்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டங்களில் பாதுகாப்
புடன் கலந்துகொள்ளும் நோக்குடன் இங்கிலாந்தில் பலர் பரிசோதனைக் கருவிகளை வாங்க முற்பட்டுள்ளனர். இதனால் அங்குள்ள பல மருந்துக்கடைகளில் பரிசோதனைக் கருவிகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக தி கார்டியன் நாளிதழ் தெரிவித்தது.
மாறாக, கொவிட்-19 பரிசோதனைக் கருவிகளை வாங்க சிங்கப்பூரர்கள் முண்டியடித்துக்கொண்டு போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக் கருவிகளுக்கான தேவை சிங்கப்பூரில் அதிகரிக்கவில்லை என்றும் தள்ளுபடி கொடுத்தும் பல கருவிகள் அப்படியே இருப்பதாகவும் உள்ளூர் மருந்துக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

