கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 75 நாள்கள் கழித்து இறந்த சிறுவனுக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 75 நாள்கள் கழித்து இறந்த சிறுவனுக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது

2 mins read
d1401d7c-8b85-493e-a598-c8ba9b400de3
படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு 75 நாள்கள் கழித்து பதின்ம வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தில் பரவிவரும் திருத்தப்பட்ட காவல்துறை புகார் பற்றி தனக்குத் தெரியும் என்றும் அமைச்சு ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு இருக்கிறது.

"அந்தப் பதின்ம வயது சிறுவன் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டதன் காரணமாக மரணமடைந்தார் என்று புகார் கூறப்படுகிறது.

"அத்தகைய ஒரு செய்தியை டாக்டர் பால் யாங் என்பவர் பதிவேற்றி இருக்கிறார். அவர், தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் செய்து வந்திருக்கிறார்," என்று அமைச்சு கூறியது.

இப்படி புகார் கூறுவது கடுமையான ஒன்று என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

அந்தப் பதின்ம வயது சிறுவனின் மரணம், மரண விசாரணைக்கு அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பல பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மரணத்திற்கான காரணம் இனிமேல்தான் தெரியவரும்.

இத்தகைய ஒரு நிலையில், அந்தச் சிறுவனின் மரணம் தொடர்பில் ஆதாரமில்லாத, நிரூபிக்கப்படாத ஊகச் செய்திகளைப் பொதுமக்கள் பரப்பக்கூடாது என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ற, கடுமையான பாதுகாப்பு, தரம், ஆற்றல்மிக்க தடுப்பூசி மருந்து மட்டுமே சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அமைச்சு தனது செய்தியில் சுட்டியது.

கொவிட்-19க்கு எதிரான முக்கிய அரணாகத் திகழும் தடுப்பூசிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி பொதுமக்களை அது கேட்டுக்கொண்டது.