ராய்ட்டர்ஸ் ஆய்வு: ஓமிக்ரான் காரணமாக வளர்ச்சி 5.4% அளவுக்குச் சரிவு
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மிதமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமிக்ரான் கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட நிச்சயமில்லா நிலையே இதற்கான காரணம்.
இந்தக் கிருமிக்கு எதிராக உலகம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடையும் என்பதைப் பொறுத்தே அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி இருக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சென்ற ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அதே காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 விழுக்காடு விரிவடைவதாகத் தெரிகிறது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்து இருக்கிறார்கள்.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளியல் 7.1 விழுக்காடு வளர்ச்சி அடைந்து உள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் 2021ல் ஏறத்தாழ 7 விழுக்காடு வளர்ச்சி அடையும். அடுத்த ஆண்டில் வளர்ச்சி 3% முதல் 5% வரை இருக்கும் என்று அதிகாரபூர்வ முன்னுரைப்புகள் தெரிவிக்கின்றன.
தொற்று காரணமாக நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புகள், உலகப் பொருளியலின் மந்தநிலை ஆகியவற்றில் இருந்து இந்த ஆண்டில் சிங்கப்பூர் மீண்டுவர தொடங்கியது.
ஆனால் திடீரென ஓமிக்ரான் தலைதூக்கியதால் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டங்களுக்கான பயணச்சீட்டு விற்பனையை சிங்கப்பூர் நிறுத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அக்டோபரில் நடத்திய தனது கூட்டத்தின்போது எதிர்பாராத விதமாக தன்னுடைய நாணயக் கொள்கையை இறுக்கியது. ஆணையம் அடுத்த ஆண்டு ஏப்ரலிலும் இதையே செய்யும் என்று பொருளியல் வல்லுநர்கள் பரவலாக எதிர்பார்க்கிறார்கள்.

