சிங்கப்பூரில் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தையொட்டி அதிகாரிகள் பரிசோதனைகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், கொவிட்-19 பாதுகாப்பு இடைவெளி நிபந்தனைகளை மீறியதற்காக 10 உணவு, பானக் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
மற்றொரு கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அளவுக்கு அதிகமாக ஒன்றுகூடியது, முகக்கவசம் தொடர்பிலான குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்காக 72 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று தெரிவித்தது.
அதிகாரிகள் கடந்த வாரம் சோதனைகளை முடுக்கிவிட்டனர். அதன் விளைவாக அந்தக் கடைகளும் தனிப்பட்டவர்களும் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆண்டு இறுதிக் காலத்தில் உணவு, பானக் கடைகளில் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
கூட்டமான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே புத்தாண்டைக் கொண்டாடி மகிழும்படியும் அமைச்சு மக்களுக்கு ஆலோசனை கூறியது.

