செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
e1d7abb5-d754-409b-b77f-2dc9c38b1f9a
-

170 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

சிங்கப்பூரில் புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி புதிதாக 341 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் 153 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

கொரோனா தொற்று காரணமாக புதிதாக ஒருவர் மரண மடைந்ததை அடுத்து, மொத்த மரண எண்ணிக்கை 826 ஆகியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

புதிதாகக் கிருமி தொற்றியோரில் 188 பேருக்கு உள்ளூரில் தொற்று ஏற்பட்டது. அவர்களில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 182 பேர். வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆறு பேர்.

இதனிடையே, புதன்கிழமை புதிதாக 170 பேருக்கு ஓமிக்ரான் கிருமி தொற்றியது. அவர்களில் 151 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 19 பேர் உள்ளூர் மக்கள் என்று அமைச்சு வேறு ஓர் அறிக்கையில் கூறியது.

தடுப்பூசி: ஓராண்டில் சிங்கப்பூர் மகத்தான சாதனை

சிங்கப்பூரில் கொவிட்-19 முதல் தடுப்பூசி 2020 டிசம்பர் 30ஆம் தேதி போடப்பட்டது. அது முதல் ஓராண்டு காலம் ஓடிவிட்டது. இந்த நிலையில், இப்போது நாட்டின் மக்கள் தொகையில் 87% முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். 39% காப்பூசி (பூஸ்டர்) போட்டுள்ளனர்.

2021 டிசம்பர் 28ஆம் தேதி நிலவரப்படி பார்க்கையில், மக்கள்தொகையில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆக அதிக விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாக இருக்கிறது என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் 'நம் உலகப் புள்ளிவிவரம்' என்ற செயல்திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பாகவே சிங்கப்பூர் தனது தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியது.

உலகம் முழுவதும் யார் யாரிடம் இருந்து தடுப்பூசி மருந்தை வாங்கலாம் என்பதை ஆராய்வதற்காக வல்லுநர் குழுவை சிங்கப்பூர் அமைத்தது.

முதலாவது கொள்முதல் உடன்பாட்டை மொடர்னா நிறுவனத்துடன் செய்துகொண்டது. இருந்தாலும் முதன்முதலாக 2020 டிசம்பர் 21ஆம் தேதி ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி மருந்து சிங்கப்பூருக்கு வந்தது.

விரைவில் டெல்டாவை ஓமிக்ரான் விஞ்சிவிடும் வாய்ப்பு

உலகில், வரும் வாரங்களில் அல்லது மாதங்களில் டெல்டாவைவிட அதிகமாக ஓமிக்ரான் கிருமித்தொற்று பரவிவிடும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரான் வேகமாகப் பரவுவதாக டாக்டர் செபாஸ்டின் மூரர் ஸ்ட்ரோ கூறினார்.

அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு முகவையின் உயிரியல் தகவல் பயிலகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் டாக்டர் செபாஸ்டின், ஒப்பிட்டுப் பார்க்கையில் டெல்டா கிருமி மங்கிவிடும் என்பதற்கான வாய்ப்புகள் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருவதாகக் குறிப்பிட்டார்.

தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தலை எடுத்த ஓமிக்ரான் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா, ரஷ்யா தென்னாப்பிரிக்கா, பிரட்டனில் ஓமிக்ரான் ஆதிக்கம் ஏற்கெனவே அதிகமாகிவிட்டதை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் மூத்த ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர் சுட்டினார்.

தடுப்பூசி: 'மற்றவருக்கு

ஊக்கமூட்ட விரும்பினேன்'

சிங்கப்பூரின் தொற்றுநோய்க்கான தேசிய நிலையத்தில் மூத்த தாதியாக பணியாற்றும் திருவாட்டி சாரா லிம்தான் 2020 டிசம்பர் 30ஆம் தேதி இங்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முதன்முதலாகப் போட்டுக்கொண்டவர்.

திருவாட்டி சாராவுக்குச் சென்ற ஆண்டு வயது 46. அவர் 20 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் சுகாதாரப் பராமரிப்பு ஊழியராகப் பணியாற்றி இருப்பவர்.

"தடுப்பூசி போட்டுக்கொண்டதைவிட அப்போது ஊடகத்தினரைப் பார்த்துதான் எனக்குப் படபடப்பு அதிக மானது. தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்னணியில் இருந்து மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்பி முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டேன்," என்று திருவாட்டி சாரா புதன்கிழமை அளித்த ஒரு போட்டியில் கூறினார்.

சிங்கப்பூரின் தடுப்பூசி இயக்கம் தனக்கு மனநிறைவு அளிப்பதாக தெரிவித்த இவர், அடுத்த ஆண்டில் சிங்கப்பூரில் ஒவ்வொருவரும் தடுப்பூசியையும் காப்பூசி யையும் (பூஸ்டர்) போட்டுக்கொண்டு இருப்பார்கள் என்றும் வாழ்க்கை வழக்கம்போல் தொடரும் என்றும் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.