விநியோக ஓட்டுநர்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவை
விநியோக ஓட்டுநர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் போன்றோருக்கு ஓய்வுகால, வீட்டுத் தேவைகளைச் சமாளிக்கக் கூடுதல் உதவி தேவை. மேலும், வேலையிடங்களில் காயமடைந்தால் அதற்கான அடிப்படை உதவியின் தொடர்பிலும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும்.
இத்தகைய துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதன் தொடர்பில் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் பரிந்துரைகளில் இந்த அம்சங்கள் அடங்கும்.
'பிளாட்ஃபார்ம் வொர்க்கர்ஸ்' என்றழைக்கப்படும் இத்தகைய ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வோரில் மூன்று விழுக்காட்டினர், அதாவது 79,000 பேர் இத்தகைய வேலைகளைச் செய்கின்றனர்.
இம்மாதம் மோசடிகளில் 8.5 மில்லியன் வெள்ளி பறிபோனது
ஒசிபிசி வங்கியைப் போல் நடத்தப்பட்ட மோசடிகளில் மொத்தமாகக் குறைந்தது 8.5 மில்லியன் வெள்ளி பலருக்கு பறிபோனது. இம்மாதம் முதல் தேதியிலிருந்து குறைந்தது 469 பேர் இத்தகைய மோசடிகளுக்கு ஆளானதாகக் காவல்துறையினர் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டனர். இவர்கள் இழந்த மொத்த தொகையில் பெரும்பங்கு கடந்த இரண்டு வாரங்களில் பறிபோனது.
தங்களின் வங்கிக் கணக்கில் பிரச்சினை இருப்பதாக மக்களுக்குக் குறுந்தகவல் வரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதைச் சரிசெய்ய இணைய முகவரி ஒன்றுக்குச் செல்லுமாறு குறுந்தகவலில் குறிப்பிட்டிருக்கும். அங்கு செல்லும்போது மக்கள் போலி வங்கி இணையத்தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அந்த இணையத்தளங்களில் தனிப்பட்ட விவரங்களைப் பதிவுசெய்த பிறகு மோசடி இடம்பெறும். சந்தேகம் தரும் இணைய முகவரிகளுக்குச் செல்லவேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
வர்த்தக அம்சங்களை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை
முதலீடுகள், சேவைகள் ஆகியவற்றை நிறுவனங்கள் மேலும் எளிதில் பெற உதவுவது, இரு நாடுகளுக்கும் இடையே மின்னிலக்க வரித்தகம் இடம்பெற வகைசெய்வது ஆகிய அம்சங்கள் குறித்து சிங்கப்பூரும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இருதரப்பு உறவின் தொடர்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'ஜேசிபிசி' எனும் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் இந்த அம்சங்களின் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்தது.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், சீனாவின் துணைப் பிரதமர் ஹான் செங் இருவரும் இணைந்து சந்திப்பை நடத்தினர். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் பல வாய்ப்புகள் உள்ளதாக 17வது முறையாக நடைபெற்ற சந்திப்பில் சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார். மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டில் சேர்ந்துகொள்ள சீனாவின் விண்ணப்பத்தை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வரவேற்றார்.

