புத்தாண்டு முதல் காவல்துறை அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
அவற்றைக் கொண்டு அவர்கள் இன்னும் தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கலாம். அதுமட்டுமல்லாது, பொதுமக்களுக்கு இன்னும் துரிதமானமுறையில் பாதுகாப்பு வழங்கலாம்.
மருத்துவ அவசரநிலை ஏற்படும் இடங்களில் அனுமதிக்காகக் காத்திருக்காமல் உடனே உள்ளே நுழைந்து உதவ அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
காயம், அகால மரணம் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க இது உதவும்.
தற்போது நடப்பில் உள்ள சட்டத்தின்படி ஒருவர் துன்பப்படுவது தெரிந்தாலும் குற்றம் நிகழவில்லை என்றால் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அத்துடன், பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படும் இடத்துக்குள் அனுமதி இன்றி உள்ளே நுழைய முடியாது.
முழுநேர தேசிய சேவையாளர்கள், தொண்டூழிய அடிப்படையில் செயல்படும் சிறப்புக் காவல் அதிகாரிகள் உட்பட அனைத்து சிறப்புக் காவல் அதிகாரிகளுக்கும் இந்தக் கூடுதல் அதிகாரம் நீட்டிக்கப்படும்.
இவர்களுக்குத் தற்போது விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது, கைது செய்யும் அதிகாரம் கிடையாது.
புதிய சட்டத்தின்கீழ் இந்த நிலை மாறும்.
வர்த்தக, நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் வர்த்தக விவகார அதிகாரி
களுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் திருடப்பட்ட பொருள்களை வைத்திருப்பவர்களை அவர்கள் கைது செய்யலாம்.
தற்போதைய நிலையில் இந்த அதிகாரிகளால் விசாரணை மட்டுமே நடத்த முடியும்.
இந்தச் சட்டத் திருத்தங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய சட்டத்தின்கீழ் மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைக்கலாம்.
மேலும், அத்தகைய தடுப்பு
களைக் கடந்து செல்லக்கூடாது என்ற காவல்துறை அதிகாரிகளின் உத்தரவை மீறுவோர் கைது செய்யப்படலாம்.
சோதனை நடத்தும் நோக்கில் சாலைகளில் அமைக்கப்படும் தடுப்புகளில் நிறுத்தாமல் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான தண்டனை மேலும் கடுமையாக்கப்படுகிறது.
சாலை தடுப்புகளில் நிறுத்தாமல் தொடர்ந்து செல்வது மட்டுமின்றி அதுதொடர்பான மற்ற விதிமீறல்களுக்கும் இது பொருந்தும்.
அதாவது, சாலைத் தடுப்புக்கு முன்பு வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து வெளியேறி தப்பிக்க முயற்சி செய்வது, சாலைத் தடுப்பைப் பார்த்ததும் தப்பிக்கும் நோக்குடன் வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்துவது, சாலைத் தடுப்புக்கு முன்பு யூ-டர்ன் செய்து தப்பிக்க முயல்வது ஆகிய செயல்களும் விதிமீறல்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
இக்குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழாண்டு சிறை, $10,000 அபராதம் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கை, நிர்வாக, மனிதவள செயல்முறைகளை வலுப்படுத்தும் மாற்றங்களும் நாளையிலிருந்து நடப்புக்கு வரும்.
சிங்கப்பூர் காவல்துறைக்காகச் செயல்படும் சிறப்பு காவல் அதிகாரிகளும் சிவிலியன் அதிகாரிகளும் காவல்துறை சங்கங்களில் சேரலாம். காவல்துறை சீருடைகள், சின்னங்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தும் முறைகளைச் சீர்ப்
படுத்துதல் போன்ற மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்படும்.
மீதமுள்ள சட்டத் திருத்தங்கள் இன்னொரு நாள் நடப்புக்கு வரும் என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இவை குறித்து கூடிய விரைவில் விவரங்கள் வெளியிடப்படும் என்று அது கூறியது.
துணைக் காவல் படைகள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது போன்ற மாற்றங்கள் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.

