செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
721c967d-c386-49ca-bc8b-f2ea837b8fc8
-

காவல்துறை அதிகாரிகளை தாக்கிய ஆடவருக்குச் சிறை

கைது செய்ய வந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய ஆடவருக்கு ஓராண்டு, 29 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று பல வாகனங்கள் சென்றுகொண்டிருந்த எஸ்பிளனேட் டிரைவ், ஃபுல்லர்டன் சாலை இடையிலான சாலைச் சந்திப்பில் சாலையின் நடுவே 30 வயது ஹசான் மன்சூர் முகம்மது அமீன் நடந்துகொண்டிருந்தார்.

சாலையில் நடக்காமல் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படி காவல்துறை அதிகாரிகள் கூறியும் அவர் கேட்கவில்லை. அவரைக் கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டபோது அவர்களை ஹசான் தாக்கினார். இதனால் டேசர் துப்பாக்கியைப் பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகள் அவரைச் சுட்டனர். ஆனால் அதிலிருந்து விடுபட்ட ஹசான் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹசான் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபோது ஹசான் துணை காவல் படை அதிகாரி ஒருவரைத் தாக்கினார்.

அவரது தண்டனைக் காலம் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதியிலிருந்து தொடங்குவதாக எடுத்துக்கொள்ளப்படும்.

வரி செலுத்தப்படாத சிகரெட் கடத்தல் முறியடிப்பு

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 600 பெட்டிகளை சிங்கப்பூருக்குள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் முறியடித்துள்ளனர். அந்தப் பெட்டிகளில் குளிர் சாதனப் பெட்டிகள் இருப்பதாக பொய் கூறப்பட்டது. இருப்பினும், பாசிர் பாஞ்சாங்கில் உள்ள ஸ்கேனிங் நிலையத்தில் பெட்டிகள் சோதனை செய்யப்பட்டபோது உண்மை தெரியவந்தது.

இந்தக் கடத்தல் முயற்சி தொடர்பாக சிங்கப்பூர் சுங்கத் துறை விசாரணை நடத்துகிறது.

வங்கிகளை ஏமாற்ற முற்பட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் உள்ள மூன்று வங்கிகளை ஏமாற்றிப் பணம் பறிக்க முயன்றதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக ரஷ்ய ஆடவரான வடிம் கோர்யாகின் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. டிபிஎஸ் வங்கி, மேபேங்க் வங்கி, ஓசிபிசி வங்கி ஆகியவற்றை ஏமாற்ற முயன்றதாக 53 வயது சைமன் பீட்டர் சிம் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.

பணிப்பெண் துன்புறுத்தல் வழக்கு; தண்டனை குறைக்கப்பட்டது

பணிப்பெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பாக முன்னாள் சிறைச்சாலை ஆலோசகரான 51 வயது காயத்ரி ஐயருக்கு முதலில் ஏழு மாதச் சிறை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், அவரது தண்டனைக்காலம் நான்கு மாதங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. தமது தண்டனைக்காலத்தை ஒன்பது வாரங்களுக்குக் குறைக்க காயத்ரி விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்தார். காயத்ரியின் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய மியன்மாரைச் சேர்ந்த 30 வயது தாக் காவ் லாம் தந்த சாட்சியத்தில் உள்ள சில பகுதிகள் நம்பகமானதாக இல்லை என்பதை நீதிபதி சுட்டினார். ஆனாலும் பணிப்பெண்ணை காயத்ரி துன்புறுத்தவில்லை என்றாகிவிடாது என்றார் நீதிபதி.

முதலாளியிடமிருந்து திருடிய பணிப்பெண்ணுக்குச் சிறை

சொந்த நாடு திரும்ப கிட்டத்தட்ட ஒரு வாரம் இருந்போது பணிப்பெண் காஸ்ட்ரோ மெல்டி அலோகியூனாவின் உடைமைகளை அவரது முதலாளி சோதனை செய்தார்்.

அப்போது அவருக்குச் சொந்தமான நகை, வெளிநாட்டு நாணயம், வீட்டுப் பொருள்கள் முதலியவற்றை பிலிப்பீன்ஸ் நாட்டவரான 32 வயது காஸ்ட்ரோ திருடியிருப்பதைக் கண்டுபிடித்தார். காஸ்ட்ரோ திருடிய பொருள்களின் மதிப்பு $14,733.35 ஆகும். முதலாளியிடமிருந்து திருடிய குற்றத்துக்காக காஸ்ட்ரோவுக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கோபத்தில் உதைத்தவருக்குச் சிறை

பேருந்தில் அமைதியாக இருக்கும்படி தமது பிள்ளைகளிடம் கூறிய 70 வயது முதியவரின் முகத்தில் எச்சில் துப்பி, அவரை உதைத்துத் துன்புறுத்தினார் 29 வயது டி சில்வா சில்வஸ்டர் மார்க். அதுமட்டுமல்லாது, வேறொரு நாளில் டாக்சி ஓட்டுநர் ஒருவரை அவர் அடித்துத் துன்புறுத்தினார். டாக்சியில் பயணம் செய்யும்போது பாதுகாப்பு வாரைப் போட்டுக்கொள்ளும்படி அவரது பிள்ளைகளிடம் ஓட்டுநர் கூறியதும் டி சில்வா கோபமடைந்தார். இதனால் டி சில்வாவுக்கு ஐந்து வாரச் சிறையும் $4,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.