இயற்கையின் மீதும் அதில் உறையும் உயிரினங்கள் மீதும் மக்கள் மேலும் பரிவு காட்ட, தம்மால் பங்காற்ற முடிகிறது என்பதில் திரு ஜெயபிரகாஷ் போஜன் மகிழ்ச்சி கொள்கிறார். சிங்கப்பூரின் பல்லுயிர் சூழலைப் படம்பிடித்துக் காட்டும் படைப்பை அண்மையில் முடித்துள்ள திருப்தியில் இவ்வாறு கூறினார் திரு ஜெயபிரகாஷ்.
இந்தியாவில் பிறந்த இவர், இயற்கை மற்றும் வனவிலங்குகளைப் படம் பிடிப்பதுடன் விளக்கப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
தம் குடும்பத்தாருடன் பாசிர் ரிசில் வசிக்கும் ஜெயபிரகாஷ், வனவிலங்குகள் மூலம் சிங்கப்பூரின் அரிய அம்சங்களுக்குப் புதுமையான கண்ணோட்டத்தை வழங்க 'ஹேஜ்ட் புரொடக்ஷன்ஸ்' எனும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் மறைந்து கிடக்கும் அற்புதங்களைக் காட்சிப்படுத்தவும் சிங்கை நகரைப் பற்றி பிரம்மாண்ட, உண்மைக் கதைகளைச் சொல்லவும் சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் மேற்கொண்ட முயற்சி இது.
திரு ஜெயபிரகாஷ் 2017ஆம் ஆண்டில் தலைசிறந்த புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றிருந்தார்.
இவர் சிங்கப்பூரை 24 மாதங்களாக வலம்வந்து, படங்களையும் காணொளிகளையும் பதிவு செய்துள்ளார். அவரின் பதிவுகளில் அரிய ஆந்தைவகைகள், நீர்நாய்கள், கடல் கழுகுகள், கூரை மீதிருந்த புனுகுப்பூனைகள், மீன்கொத்திப் பறவைகள் போன்ற உயிரினங்கள் இடம்பெற்றிருக்கும்.
"இந்தச் சிறிய தீவின் பல்லுயிர் சூழல் அற்புதமானது," என்றார் 46 வயது ஜெயபிரகாஷ். தமிழ்நாட்டைச் சேர்ந்த உதகமண்டலத்தைச் சேர்ந்த இவர், தம் மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் சிங்கப்பூருக்கு 2016ல் வந்தார்.
நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் திரு ஜெயபிரகாஷ், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காணொளிக் கதைகளைப் பதிவு செய்து வருகிறார்.
பொழுதுபோக்காகக் தொடங்கியது, பின்னாளில் முக்கிய நோக்கமுடைய புகைப்பட, காணொளிப் பதிவு நடவடிக்கையாக மாறியது.
"என் பதிவுகள் வழி இயற்கை, வனவிலங்கு போன்றவைகளின் மீது மக்கள் காதல் கொள்ள நான் உதவுகிறேன். போர்னியோவின் பொழில் சூழல்களில் ஏற்படும் அழிவைக் குறித்த விழிப்புணர்வையும் என்னால் புகைப்படக் கண்காட்சிகள் மூலம் ஏற்படுத்த முடிகிறது.
"மக்கள் இயற்கை மீது காதல் கொள்ள வேண்டும். உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலை, உயரும் கடல் மட்டம், நெகிழியால் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற விவகாரங்களுக்கிடையே இயற்கை மீதும் அதில் வசிக்கும் உயிர்கள் மீதும் மக்கள் மேலும் அக்கறை கொள்வதில் நான் பங்காற்றுவது முக்கியம்," என்று தெரிவித்தார் திரு ஜெயபிரகாஷ்.

