தொழிற்சாலை வளாகம் ஒன்றில் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 3,200க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகள் சிக்கின.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று லோயாங் டிரைவ் அருகே அமைந்துள்ள அந்த வளாகத்தில் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
மூன்று ஆடவர்களும் 16 வயது சிறுவனும் இந்த அமலாக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று விடுத்த அறிக்கையில் சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது.
கட்டில் சட்டங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளை ஆடவர் ஒருவர் எடுத்துப் பைகளில் வைப்பதை அமலாக்க அதிகாரிகள் கண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளுக்குச் செலுத்த வேண்டிய வரி, கிட்டத்தட்ட $298,000 என்று கூறப்பட்டது.
நீதிமன்றத்தில் இருவர் மீது நேற்று முன்தினம் குற்றம் சாட்டப்பட்டது. மற்ற இருவர் மீதான விசாரணை நடந்து வருகிறது.