விமி பாஸ்கல் குபதோன், 42, என்ற பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணை, திருவாட்டி இ பெய் ஹூங், 49, என்ற மாது தன்னுடைய தாயாரான திருவாட்டி கோ ஜெக் கியோவைப் பராமரித்து பார்த்துக்கொள்வதற்காக வேலையில் அமர்த்தினார்.
திருவாட்டி கோவுக்கு வயது 82. அவருக்குக் கொஞ்சம் நினைவாற்றல் குறைபாடு உண்டு.
இதைப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பணிப்பெண், அந்த முதிய மாதின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி அவருடைய கணக்கில் இருந்து $28,200ஐ திருடினார்.
முதிய மாதின் வங்கிக் கணக்கும் அவருடைய புதல்வியான திருவாட்டி இ பெய் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பணிப்பெண் மொத்தம் 23 தடவை பணம் எடுத்தார்.
திருடிய பணத்தில் ஒரு பகுதியை பிலிப்பீன்சில் உள்ள தன் குடும்பத்தாருக்கு அனுப்பினார். கொஞ்ச பணத்தைச் செலவிட்டு நகைகளை வாங்கினார்.
திருடியதாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் விமி குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே, நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையைக் குறைக்கும்படி வாதாடியபோது அந்தப் பணிப்பெண் கதறி அழுததாக ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்தது.
தன்னுடைய உடன்பிறப்புகள் பிலிப்பீன்சில் படித்து வருவதாகவும் தன்னுடைய ஊதியத்தைத் தவிர தன் குடும்பத்திற்கு வேறு வருமானம் ஏதும் இல்லை என்றும் கூறிய அந்தப் பணிப்பெண், இருந்தாலும் தான் செய்த காரியத்தை நினைத்து மிகவும் வருந்துவதாகவும் விசாரணையின்போது தெரிவித்தார்.
பணிப்பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை சென்ற ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உத்தரவிடப்பட்டது.