சிங்கப்பூரின் ஆகப் பெரிய செல்வந்தர்கள் இருவரின் மகன்கள் இணைந்து ஒரு முயற்சியில் இறங்கியுள்ளனர். திரு பீட்டர் லிம்மின் மகனான 28 வயது திரு கியட் லிம், பிரபல மெவா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பின்னணியில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த 37 வயது திரு எல்ராய் சியோ இருவரும் இணைந்து 'பிளாக்செயின்' முறையில் இடம்பெறும் 'என்எஃப்டி' எனப்படும் மின்னிலக்கத் தரவு வட்டுகளின் தொடர்பில் செயலி ஒன்றை உருவாக்குகின்றனர். தற்போது உலகை ஆட்கொண்டிருக்கும் 'கிரிப்டோகரன்சி' எனும் மின்னிலக்க நாணய மோகம் இவ்விருவரையும் விட்டு வைக்கவில்லை.
இருவரும் ஏஆர்சி எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். அதற்குச் சொந்தமான 'என்எஃப்டி' வட்டுகளை வைத்திருப்போர் சேர்ந்துகொள்ள இணையத்தில் குழு ஒன்றை அமைப்பது இவர்களின் இலக்கு. தொழிலதிபர்கள், சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தவர்கள் உள்ளிட்டோரைக் ஈர்க்க இவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.
திரு கியட் லிம்மும் திரு எல்ராய் சியோவும் மின்னிலக்க நாணயத்தில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள். இருவரின் சகோதரிகளும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்கள். திரு லிம்மின் சகோதரியான கிம்மிற்கு இன்ஸ்டகிராமில் 'ஃபாலோவர்ஸ்' என்றழைக்கப்படும் சுமார் 319,000 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். திரு சியோவின் சகோதரி அரிசாவிற்கு 355,000 ரசிகர்கள் உள்ளனர்.

