பேரங்காடிகளில் வாடிக்கையாளர்கள் அதிகமான பொருள்களை வாங்கும்போது எனும் தள்ளுவண்டியைப் பயன்படுத்துவர். முஸ்தஃபா கடைத்தொகுதி, என்டியுசி ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டாரேஜ் உள்ளிட்ட பேரங்காடிகளில் இந்த வசதி உண்டு. சில வேளைகளில் அதிகமான பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கிய பிறகு வீடு வரை தள்ளுவண்டியைக் கொண்டு செல்வதும் உண்டு.
சிலர் பொறுப்பாக அவற்றை சம்பந்தப்பட்ட கடையிடம் ஒப்படைத்துவிடுவர். உதாரணமாக, ரிவர்வேல் கிரெசண்டில் வசிக்கும் திரு சபேஸ்டியன் சுவா,தனது வீட்டிலிருந்து மூன்று வீவக புளோக்குகளுக்கு அப்பால் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பொருள்களை வாங்கிக் கொண்டு பொதுவாக வீட்டிற்கு நடந்து வருவார்.
சில மாதங்களுக்கு ஒரு முறை ஐந்து கிலோகிராம் எடை கொண்ட அரிசி மூட்டை போன்ற பெரிய பொருள்களை வாங்கும்போது தள்ளுவண்டியில் பொருள்களை வீட்டிக்குக் கொண்டு செல்வார். அதற்குப் பிறகு தள்ளுவண்டியைப் பேரங்காடியிடம் ஒப்படைப்பார். "தள்ளுவண்டி நமக்குச் சொந்தமானதல்ல. அவ்வப்போது அதைப் பயன்படுத்தத் தேவையிருக்கும், அதேவேளையில் பொறுப்பாக திரும்பக் கொடுக்கவேண்டும்," என்று 54 வயது திரு சுவா குறிப்பிட்டார்.
எனினும், எல்லா குடியிருப்பாளர்களும் இவரைப்போல் யோசிப்பதில்லை. ரிவர்வேல் கிரசெண்டின் சாலைக்கு அருகே பல தள்ளுவண்டிகள் இருந்ததை சண்டே டைம்ஸ் கண்டது.
பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இதைக் கருத்தில் கொண்டு 'எம்எஸ்ஓ' எனும் நகராட்சி சேவைகள் அலுவலகம், கடைகளிடம் ஒப்படைக்காமல் பொது இடங்களில் விடப்படும் தள்ளுவண்டிகளை அடையாளம் காண்பதற்கான 'ஸ்பாட் அபேண்டண்ட் டிராலிஸ்' அம்சத்தை 'ஒன்சர்விஸ்' எனும் தனது செயலியில் சேர்த்துள்ளது. இதில் ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், முஸ்தஃபா, ஜயன்ட், கோல்ட் ஸ்ரடோரேஜ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
தேசிய வளர்ச்சி அமைச்சின்கீழ் செயல்படும் நகராட்சிச் சேவைகள் அலுவலகம், தனது செயலியின் வாயிலாக வெளியே கிடக்கும் தள்ளுவண்டிகளின் தொடர்பில் சென்ற ஆண்டு 6,559 புகார்கள் வந்ததாகத் தெரிவித்தது. செயலியின் மூலம் குடிமக்கள் நகராட்சி விவகாரங்கள் குறித்து அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.
2019ஆம் ஆண்டு 5,429 புகார்கள் கொடுக்கப்பட்டன. 2020ல் மக்கள் 6,662 புகார்களைத் தந்தனர். கூடுதலானோர் செயலியைப் பதிவிறக்கம் செய்ததால் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
திரும்பத் தரப்படாத தள்ளுவண்டிகளால் பேரங்காடிகளுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. தள்ளுவண்டிகளைத் திரும்பப் பெறுவது, அவற்றைப் பழுதுபார்ப்பது, மாற்றுத் தள்ளுவண்டிகளுக்கு ஏற்பாடு செய்வது ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 150,000 வெள்ளி செலவாவதாக ஃபேர்பிரைஸுக்கான பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சென்ற ஆண்டு, நவம்பர் மாதம் வரை மட்டுமே திரும்பப் பெறாத தள்ளுவண்டிகளின் தொடர்பில் ஃபேர்பிரைஸுக்கு சுமார் 4,000 புகார்கள் வந்தன. 2019, 2020ஆம் ஆண்டுகளில் புகார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,300ஆகத்தான் இருந்தது. இது, தொடர்ந்து இருந்து வரும் ஒரு பிரச்சினையைக் கையாள பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பொறுப்புணர்வை வளர்ப்பது ஆகிய அம்சங்களே வழிகள் என்று ஃபேர்பிரைஸ் சுட்டியது.

