சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து கூடியது

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து கூடியது

2 mins read
44d4bbcd-6404-4480-858f-9c79be21d50d
சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து கடந்த மாத இறுதி நிலவரப்படி சற்று அதிகரித்தது. கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முந்திய நிலைக்கு விமானப் பயணங்கள் திரும்ப பல ஆண்டுகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து மாத இறுதி நிலவரப்படி சற்று மேம்பட்டது.

கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த பயணிகள் போக்குவரத்து விகிதத்தில் 15 விழுக்காடு மட்டுமே கடந்த ஆண்டு இறுதியில் பதிவானது.

இருப்பினும், கடந்த ஆண்டு தொடக்கத்தில் பயணிகள் போக்குவரத்து விகிதம் வெறும் மூன்று விழுக்காடாக இருந்ததைப் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சுட்டினார்.

சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சக்தியாண்டி சுப்பாட், ஷோன் ஹுவாங் ஆகியொர் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஈஸ்வரன் பதிலளித்தார்.

கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முந்திய நிலைக்கு விமானப் பயணங்கள் திரும்ப பல ஆண்டுகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம், ஆக்ஸ்ஃபர்ட் பொருளியல் ஆகியவை நடத்திய ஆய்வை அவர் மேற்கோள் காட்டினார்.

இவ்வாண்டு இறுதிக்குள் விமானப் போக்குவரத்து விகிதம் 2019ஆம் ஆண்டில் பதிவான விகிதத்தில் 55 விழுக்காட்டை எட்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் போன்ற பின்னடைவுகள் ஏற்படாமல் இருந்தால் இவ்வாண்டில் நிலைமை மேலும் மேம்படும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கடற்துறையைப் பொருத்தமட்டும், கடந்த ஆண்டில் கொள்கலன்களைக் கையாளும் பணிகள் உச்சத்தைத் தொட்டதாக திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.

"கடற்துறை வர்த்தகங்கள் சிங்கப்பூரில் அவற்றின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தின. வர்த்தகத்துக்கும், கப்பல் துறைக்கும் இத்தகைய சாதகமான சூழல் இவ்வாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்," என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.

கடல்வழி வர்த்தகம் இவ்வாண்டு 3.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.