முதிய துப்புரவுப் பணியாளர் ஒருவரை அடித்துக் காயப்படுத்திய ஆடவருக்கு 9 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 74 வயது முதிய
வருக்கு கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவரது பொய்ப் பற்களும் உடைந்தன, வாயிலிருந்து ரத்தம் கசிந்தது.
வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றச்சாட்டை சிங்கப்பூரரான 60 வயது லிம் டின் சூன் ஒப்புக்கொண்டார்.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று பொங்கோல் பேருந்து நிலையத்தில் காலை உணவு சாப்பிட இருந்த லிம்முக்கு அங்கு உட்கார இடம் கிடைக்கவில்லை.
எனவே, பேருந்து ஓட்டுநர்
களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர் அமர்ந்தார்.
இதைப் பார்த்த அந்த முதியவர் அங்கு உட்காரக்கூடாது என்று சொன்னதும், லிம் சினங்கொண்டார். மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட லிம் முதியவரைத் தாக்கினார்.
லிம் அடித்ததில் அந்த முதியவர் கீழே விழுந்ததாகவும் மற்றவர்கள் உதவிய பிறகே அவரால் மீண்டும் எழுந்திருக்க முடிந்ததாகவும் அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
காணொளியில் பதிவான
அந்தத் தாக்குதல் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது.
தாக்குதலை நேரில் கண்ட நிலப் போக்குவரத்து ஆணையப் போக்குவரத்துத் தூதர் லிம் டக் கியோங் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
காயமடைந்த முதியவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஏழு நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
முதியவரின் மருத்துவச் செலவு ஏறத்தாழ $145 ஆனது. இந்தத் தொகையை லிம்
கொடுத்துவிட்டார்.
பொது இடத்தில் முதியவரை மூர்க்கத்தனமாகத் தாக்கிய லிம்முக்கு 10லிருந்து 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
முதியவர் லிம்மைத் தூண்டும் வகையில் நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் தமது கடமையைத்தான் செய்தார் என்றும் அவர் கூறினார்.
முதியவரைத் தாக்கிய பிறகு லிம் அவ்விடத்தைவிட்டு தப்பி ஓடியதை அவர் சுட்டினார்.
தமது கட்சிக்காரர் யோசிக்காமல் நடந்துகொண்டதாகவும் உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்றும் லிம்மின் வழக்கறிஞரான ஜாஸ்மின் தனராஜ் நீதிமன்றத்தில் கூறினார். தமது செயலுக்காக லிம் வருத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். முதியவரை அவர் திட்டமிட்டுத் தாக்கவில்லை என்றார் அவர்.
வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

